கோத்தபாய ராஜபக்சேவுக்குப் பயணத் தடை

கோத்தபாய ராஜபக்சேவுக்குப் பயணத் தடை

2 mins read
7c533369-8dfb-47d0-ba70-ee6e1d57d3b9
கோத்தபாய ராஜபக்சேவுடன் (வலது) சேர்த்து மேலும் இரண்டு ராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறாதவாறு தடுக்குமாறு இலங்கைக் குடிநுழைவு அதிகாரிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ள வேளையில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராகப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சேவுடன் சேர்த்து மேலும் இரண்டு ராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்ளும்படி இலங்கைக் குடிநுழைவு அதிகாரிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“மூவரும் வெளிநாடு சென்றால் அது குண்டுவெடிப்பு தொடர்பான தொடர் விசாரணைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்,” என்று இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இவ்வழக்கில் கோத்தபாய ராஜபக்சே அதிகாரபூர்வமாகக் குற்றவாளியாகச் சேர்க்கப்படாவிட்டாலும், இந்த விவகாரத்தில் விசாரணைக்குரிய முக்கிய நபராக அவர் நேரடியாகத் தொடர்புபடுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

2019ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 45 வெளிநாட்டினர் உட்பட 279 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கோத்தபாயவின் உளவுத்துறைத் தலைவராக இருந்த சுரேஷ் சல்லே கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஊடகமான ‘சேனல் 4’ வெளியிட்ட ஆவணப்படத்தில், சுரேஷ் சல்லே குண்டுவெடிப்புக்கு முன்னதாகவே பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் அந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சேவுக்குச் சாதகமான அரசியல் அலையை உருவாக்கி, அவரை மாபெரும் வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் இத்தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இத்தாக்குதல் நடந்த இரண்டு நாள்களிலேயே கோத்தபாய தமது அதிபர் தேர்தல் வேட்புமனுவை அறிவித்து, தேர்தலில் வெற்றியும் பெற்றார். எனினும், இலங்கையில் ஏற்பட்ட கடும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டங்கள் காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர் தமது பதவியிலிருந்து விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்