இம்ரான் கானை நல்ல முறையில் நடத்துங்கள்: கபில்தேவ், கவாஸ்கர் கோரிக்கை

இம்ரான் கானை நல்ல முறையில் நடத்துங்கள்: கபில்தேவ், கவாஸ்கர் கோரிக்கை

2 mins read
13f0f048-8a8f-4ffd-9c95-a18346a910ca
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தலைவர் இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டுமெனக் கோரி தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியினர் பிப்ரவரி 13ஆம் தேதி கார்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

புதுடெல்லி: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானைச் சிறையில் நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் கபில்தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல அனைத்துலக வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளின்பேரில் கடந்த 2023 ஆகஸ்ட்டிலிருந்து இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் தமது வலக்கண் பார்வைத்திறனைக் குறிப்பிடத்தக்க அளவு இழந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் சென்ற வாரம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தார். அதன்பின், வீக்கம் சற்றுக் குறைந்துவிட்டதால் அவரது பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் திங்கட்கிழமை (பிப்ரவரி 16) மருத்துவக் குழு தெரிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே அரசதந்திர உறவுகள் சுமுகமாக இல்லை. இருந்தபோதும், சிறையில் இம்ரான் கான் நடத்தப்பட்டுவரும் விதம் குறித்து கவலை தெரிவிக்கும் ஒரு கோரிக்கை மனுவில் கபில்தேவும் கவாஸ்கரும் கையெழுத்திட்டுள்ளனர்.

“எங்களில் பலரும் இம்ரான்கானுக்கு எதிராக விளையாடி இருக்கிறோம்; அவருடன் களத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளோம்; அல்லது அவரது ஆட்டத்திறன், ஈர்ப்புத்திறன், போட்டித்தன்மை ஆகியவற்றை அவரை முன்மாதிரியாகக் கொண்டுவளர்ந்துள்ளோம்,” என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

“அவரது உடல்நிலை குறித்த அண்மைத் தகவல்கள், குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கண்பார்வை மோசமடைந்துவிட்டதாக வந்த தகவலாலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாலும் நாங்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளோம்.

“முன்னாள் தேசியத் தலைவரும் அனைத்துலக விளையாட்டு முன்மாதிரியாகவும் திகழும் இம்ரான் கான் கண்ணியமாகவும் அடிப்படை மனிதநேயத்துடனும் நடத்தப்படத் தகுதியானவர் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அக்கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரேக் சேப்பல், இயன் சேப்பல், ஆலன் பார்டர், ஸ்டீஃபன் வா, பெலிண்டா கிளார்க், கிம் ஹியூஸ் (அறுவரும் ஆஸ்திரேலியா), மைக்கல் ஆர்தர்டன், நாசர் ஹுசைன், மைக்கல் பிரேர்லி, டேவிட் கோவர் (நால்வரும் இங்கிலாந்து), கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகிய முன்னாள் தலைவர்களும் அம்மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்