சிட்னி: ஆஸ்திரேலியாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐந்து வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்நாட்டைச் சேர்ந்த ஆடவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (மே 3) தெரிவித்தது.
சிறுமியின் கொலை ஆஸ்திரேலியாவையே உலுக்கியுள்ளது. ‘குமஞ்சாயி லிட்டில் பேபி’ என்று மக்களால் செல்லப்பெயரிடப்பட்ட அந்தச் சிறுமியின் உடலை ஏலிஸ் ஸ்பிரிங்ஸ் என்ற தொலைதூர நகரில் கடந்த வாரம் உளவுத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன்பிறகு, ஜெஃபர்சன் லூயிஸ் என்ற 47 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு முன்பாகப் பழங்குடியினச் சமூகத்திடம் தானே சரண் அடைந்தார். பின்னர் அவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் சுயநினைவிழந்தார். அவரை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய வடக்குப் பிரதேசக் காவல்துறை, ஆடவர்மீது கொலைக்குற்றமும் பாலியல் வன்முறைக் குற்றங்கள் இரண்டும் சுமத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
“மிகவும் மனவேதனை மனவேதனை அளிக்கும் சம்பவமாக இது உள்ளது, குழந்தையின் குடும்பத்துக்கும் சமூகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்,” என்று காவல்துறை ஆணையர் மார்டின் டொல் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
சிறுமி பழங்குடியினச் சமூக முகாமில் இருந்து அண்மையில் காணாமல் போனார். அதையடுத்து அவரைத் தேடும் பணியில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டனர்.
ஆஸ்திரேலியப் பிரதமர் கவலை
ஆஸ்திரேலியர்கள் அனைவரையும் இச்சம்பவம் மனமுடையச் செய்திருப்பதாகப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்தார்.
“நடக்கக்கூடாது என்று நாங்கள் பயந்த மிகத் துயர முடிவு நடந்துவிட்டது. சிறுமியின் குடும்பத்தினர் படும் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அனைத்து ஆஸ்திரேலிய மக்களும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

