கோல்கத்தா: மேற்கு வங்கப் பெண்கள் அரசியலில் பெரிதாக வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காகத் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சதி செய்துள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் 33 விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17), மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போதிய வாக்குகள் இல்லாத காரணத்தால் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாகத் திரு மோடி எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடிவருகிறார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29ஆகிய தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாகப் பிரதமர் மோடி அந்த மாநிலத்தின் பன்குரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காட்டு இடத்தை வாங்கித் தர நடவடிக்கை எடுத்தேன். ஆனால், திரிணாமூல் கட்சி, காங்கிரசுடன் இணைந்து மேற்கு வங்கப் பெண்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது,” என்று கூறினார்.
“மேற்கு வங்கப் பெண்கள், 33 விழுக்காட்டு மகளிர் இட ஒதுக்கீட்டுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்காக எனது அரசும் நடவடிக்கை எடுத்தது. 2029ல் இதை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டோம். ஆனால் மேற்கு வங்கப் பெண்கள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை எட்டிவிடக்கூடாது என்பதில் திரிணாமூல் கட்சி கவனமாக உள்ளது,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

