தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜமைக்காவில் கரையைக் கடந்தது மெலிசா சூறாவளி

1 mins read
eb416702-0d1d-4f79-b953-d6987c3bc598
ஜமைக்காவின் செயின்ட் கேத்தரினில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) விழுந்த மரம். 2.8 மில்லியன் மக்களைக் கொண்ட கரீபிய நாடான அதில் மெலிசா சூறாவளியால் பலத்த காற்று வீசியதோடு பெருமழையும் பெய்தது. - படம்: ஏஎஃப்பி

கிங்ஸ்டன்: மெலிசா சூறாவளி செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) காலை கரீபிய நாடான ஜமைக்காவின் மேற்குப் பகுதியில் கரையைக் கடந்தது. 2.8 மில்லியன் மக்களைக் கொண்ட ஜமைக்காவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவான மெலிசா சூறாவளி தாக்கியது. அதனால் பலத்த காற்று வீசியதோடு பெருமழையும் பெய்தது.

நியூ ஹோப் எனும் நகரத்திற்கு அருகே சூறாவளி கரை கடந்தது. மோன்ட்டேகோ விரிகுடாவுக்குக் கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தெற்கே மணிக்கு 295 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அமெரிக்க தேசியச் சூறாவளி நிலையம் அந்தத் தகவலை வெளியிட்டது.

மலைப்பாங்கான தீவுப் பகுதியைச் சூறாவளி கடக்கும்போதும் அது தொடர்ந்து வலுவாகவே இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. கியூபாவின் இரண்டாவது ஆகப்பெரிய நகரமான சேன்ட்டியாகோ டி கியூபாவை நோக்கி சூறாவளி நகர்கிறது.

மெலிசா சூறாவளியின் பாதையில் இருக்கும் கட்டடங்கள் கடுஞ்சேதத்திற்கு உள்ளாகும் என்று சூறாவளி நிலையம் எச்சரித்தது.

ஜமைக்கா மக்கள் இதுவரை கண்டிராத அளவுக்குச் சேதம் மோசமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூறாவளி கரையைக் கடக்கும் முன்னர் ஏற்பட்ட மின்சாரத் தடை, பயனீட்டாளர்களில் ஏறக்குறைய 35 விழுக்காட்டினரைப் பாதித்திருப்பதாக ஜமைக்காவின் மின்பயனீட்டு நிறுவனமான ஜேபிஎஸ் (JPS) தெரிவித்தது.

கிட்டத்தட்ட 28,000 பேரை வீடுகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அவர்களின் வீடுகளைவிட்டுக் கிளம்பத் தயங்குகின்றனர்.

குறிப்புச் சொற்கள்