டிரம்ப் நிர்வாகம் 300,000க்கும் அதிகமான விசாக்களை ரத்துச் செய்தது

டிரம்ப் நிர்வாகம் 300,000க்கும் அதிகமான விசாக்களை ரத்துச் செய்தது

படம்: ராய்ட்டர்ஸ்

21 Oct 2026 - 1:02 pm

2 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தில் 300,000க்கும் அதிகமான அமெரிக்க விசாக்களை ரத்துச் செய்துள்ளது.

அமெரிக்க அரசாங்கம் குடிநுழைவு விதிமுறைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில், வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) அந்தத் தகவலை வெளியிட்டது.

அண்மைய வாரங்களில் விசாக்கள் ரத்துச் செய்யப்படும் வேகம் அதிகரித்துள்ளதை அந்த நடவடிக்கை காட்டுவதாகக் கூறப்பட்டது.

2025ஆம் ஆண்டு ஜனவரியில் திரு டிரம்ப்பின் தற்போதைய ஆட்சிக்காலம் தொடங்கிய பிறகு ரத்தான விசாக்களின் எண்ணிக்கை 175,000க்கும் அதிகம் என்று அமைச்சு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

குடியேற்ற ஒடுக்குமுறை, நாடுகடத்தல் ஆகிய நடவடிக்கைகள் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று அமெரிக்க அதிபர் கூறுகிறார்.

ஆனால், இந்த ஒடுக்குமுறை, சட்ட விதிமுறைகளையும் பேச்சுரிமையையும் மீறியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். முக்கியமாக இன ரீதியான பாகுபாடு குறித்துச் சிறுபான்மையினரிடையே அது கவலையை எழுப்பியுள்ளதாக அவர்கள் கூறினர். அத்துடன் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டது தொடர்பான புதிய எண்ணிக்கையை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் டாமி பிகோட் எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

“வரலாற்றிலேயே எந்தவொரு நிர்வாகத்தையும்விட டிரம்ப் நிர்வாகம் அதிக விசாக்களை மிக வேகமான விகிதத்தில் ரத்துச் செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

“சட்டத்தை மீறி மோசடியில் ஈடுபடும் அல்லது தேசியப் பாதுகாப்பிற்குப் பாதகமாகச் செயல்படும், விசா வைத்துள்ள வெளிநாட்டினரை நிர்வாகம் எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ளாது,” என்று திரு பிகோட் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் தேர்தல் பிரசாரத்தின்போது சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதாகத் திரு டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். ஆயினும் அவரின் நிர்வாகம் குறிப்பிட்ட வேலைகளுக்கான விசாக்களுக்கு அதிகக் கட்டணங்களை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டபூர்வக் குடியேற்றத்தையும் கடினமாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்அதிபர்விசாரத்து