வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு எதிராக அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் தொடுத்த வழக்கைக் கலிஃபோர்னியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய அரசாங்கத்தின் குடிநுழைவு அதிகாரிகளுடனான ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் லாஸ் ஏஞ்சலிஸ், ஆணை ஒன்றைப் பிறப்பித்ததற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.
அந்த ஆணை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று டிரம்ப் அரசாங்கம் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தை அமெரிக்க மாவட்ட நீதிபதி ஃபெர்னான்டோ ஓல்குயின் நிராகரித்தார். மாறாக, திருத்தம் செய்யப்பட்ட புகாரை அது சமர்ப்பிக்கலாம் என்று அவர் அனுமதி வழங்கினார்.
நீதிபதியின் தீர்மானம் குறித்து வெள்ளை மாளிகை உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
உள்ளூர் அரசாங்கங்களுக்கு அவற்றின் அதிகாரிகளையும் வளங்களையும் எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்ற கொள்கையை நீதிமன்றம் வலியுறுத்தியிருப்பதாக லாஸ் ஏஞ்சலிஸ் தலைமைச் சட்ட அதிகாரி ஹைடீ ஃபெல்ட்ஸ்டன் சோட்டோ தெரிவித்தார்.
குடிநுழைவு அமலாக்க நடவடிக்கைகளுக்காக நகரின் வளங்களைப் பயன்படுத்த முடியாதபடி தடைசெய்யும் கொள்கையை லாஸ் ஏஞ்சலிஸ் அறிவித்தது. தனிநபரின் குடியுரிமைத் தகுதி குறித்து அறிந்துகொள்ள முடியாதபடியும் அந்தக் கொள்கை தடுக்கிறது.
அதுபோன்ற கொள்கை, மத்திய அரசாங்கத்தின் சட்டத்தை மீறுவதாக டிரம்ப் அரசாங்கம் லாஸ் ஏஞ்சலிஸ் நகர்மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்குத் தொடுத்தது.
குடியேறிகளைச் சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைக் களைக்க திரு டிரம்ப் ராணுவ வீரர்களை அனுப்பியிருந்தார்.
அந்தச் சம்பவம் நிகழ்ந்த ஒருசில வாரங்கள் கழித்து நகரின்மீது அவரது அரசாங்கம் வழக்குத் தொடுத்தது.
ஜனநாயகக் கட்சியினர் நிர்வகிக்கும் நகரங்களில் கடைப்பிடிக்கப்படும் அதேபோன்ற கொள்கைகளுக்கு எதிராக டிரம்ப் அரசாங்கம் இதற்குமுன் பல்வேறு வழக்குகளைத் தொடுத்துள்ளது.
பாஸ்டன், சிக்காகோ ஆகிய நகரங்களுக்கு எதிரான டிரம்ப் அரசாங்க வழக்குகளையும் மத்திய நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.


