வாஷிங்டன்: பிரேசிலிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கத் திட்டமுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 9) அறிவித்தார். அத்துடன், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்த விசாரணையைத் தொடங்கவும் அவர் உத்தரவிட்டார். இது, இன்னும் அதிக வரிகளுக்கு வழிவகுக்கக்கூடும்.
பிரேசிலிய அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு எழுதிய வரிவிதிப்புக் கடிதத்தில் திரு டிரம்ப் நிர்ணயித்துள்ள புதிய வரி, ஆகஸ்ட் 1ஆம் தேதி நடப்புக்கு வரும். ஏப்ரல் 2ஆம் தேதி பிரேசில்மீது விதிக்கப்பட்ட 10 விழுக்காட்டு வரியைவிட இது மிகவும் அதிகம்.
1974 வர்த்தகச் சட்டப்பிரிவு 301ன்கீழ் பிரேசிலின் கொள்கைகள் தொடர்பில் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்த விசாரணையைத் தொடங்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகத்திற்கும் திரு டிரம்ப் உத்தரவிட்டார். இந்த விசாரணை பிரேசிலிய ஏற்றுமதிகள்மீது கூடுதல் வரிகளுக்கு வழிவகுக்கும்.
திரு டிரம்ப் முன்னதாக தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் ஏழு சிறிய வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளுக்கு வரிவிதிப்புக் கடிதங்களை அனுப்பினார். அந்த வரிகளும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடப்புக்கு வருகின்றன.
பிலிப்பீன்ஸ் ஏற்றுமதிகளுக்கு 20 விழுக்காடு வரி விதிக்கப்படும். இலங்கை, அல்ஜீரியா, ஈராக், லிபியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 30 விழுக்காடு வரியும் புருணை, மால்டோவா ஏற்றுமதிகளுக்கு 25 விழுக்காடு வரியும் விதிக்கப்படும்.
இந்த நாடுகள், அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் சிறிய பங்கு கொண்டுள்ளன, 2024ல் அமெரிக்க இறக்குமதியில் வெறும் US$15 பில்லியனுக்கும் (S$19 பி.) குறைவாகவே இவை பங்கு வகித்தன.
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளியலான பிரேசில், அமெரிக்காவின் 15வது பெரிய வர்த்தகப் பங்காளியாக விளங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே 2024ல் மொத்தம் US$92 பில்லியன் வர்த்தகம் இடம்பெற்றது. இதில் அரிதாக, அமெரிக்காவுக்கு US$7.4 பில்லியன் வர்த்தக உபரி ஏற்பட்டது.
இந்த வாரத் தொடக்கத்தில் திரு டிரம்ப், மற்ற நாடுகளுக்கும் 14 வரிவிதிப்புக் கடிதங்களை அனுப்பியிருந்தார். தென்கொரிய, ஜப்பானிய ஏற்றுமதிகள் மீதான 25 விழுக்காட்டு வரிகளும் இவற்றில் அடங்கும். எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஆகஸ்ட் 1ஆம் தேதி அவை நடைமுறைக்கு வரும்.
தொடர்புடைய செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை
இதற்கிடையே, சீனாவுடனும் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்துடனும் வர்த்தகப் பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக திரு டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் என்ன வரி விகிதத்தை எதிர்பார்க்கலாம் என்பதை அநேகமாக அடுத்த இரண்டு நாள்களுக்குள் தெரிவிக்கப்போவதாக திரு டிரம்ப் சொன்னார். 27 நாடுகள் கொண்ட இந்தக் கூட்டமைப்பு நன்கு ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்.
ஒரு கட்டமைப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் சில நாள்களில் ஓர் ஒப்பந்தம் சாத்தியமாகலாம் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தலைவர் மாரோஸ் செஃப்கோவிச் தெரிவித்தார்.
இருப்பினும், இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ‘மிகவும் சிக்கலானது’ என்றும் காலக்கெடு வரை அது தொடரலாம் என்றும் இத்தாலியப் பொருளியல் அமைச்சர் ஜியான்கார்லோ ஜியோர்ஜெட்டி முன்னதாக எச்சரித்திருந்தார்.