ரஷ்ய டீசலுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தார் டிரம்ப்

ரஷ்ய டீசலுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தார் டிரம்ப்

படம்: ஏஎஃப்பி

10 Oct 2026 - 2:11 pm

2 mins read

நியூயார்க்: எரிபொருள் விலையைக் குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கு ரஷ்ய டீசலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க, உலகளாவிய சந்தைக்கு உடனடியாக 300,000 டன் டீசலை வெளியிட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஒப்புக்கொண்டதாகவும், அதைத் தொடர்ந்து நவம்பரில் 500,000 டன்னும், அதன்பிறகு மேலும் ஒரு மில்லியன் டன்னும் விற்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் கோபத்தைத் தூண்டியது. அவர் இதை, “முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய, நீட்டிக்கப்படக் கூடாத ஒரு போரில் செய்யப்படும் முதலீட்டிற்குச் சமமாகப் புட்டினுக்கு வழங்கப்படும் பரிசு,” என்று வர்ணித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரஷ்ய டீசல் ஏற்றுமதி மீதான தடைகளை 2027 ஏப்ரல் 7ஆம் தேதி வரை அமெரிக்க நிதியமைச்சு நிறுத்திவைப்பதாக அறியப்படுகிறது. ஆனால் அமெரிக்க வங்கிகளில் உள்ள சொத்துகள் போன்ற பிற சொத்துகள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில், உக்ரேனின் தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையைப் பொறுத்து, மேலும் மூன்று மில்லியன் டன் ரஷ்ய டீசல் குறுகிய காலத்திற்குள் அமெரிக்காவுக்கு விநியோகிக்கப்படும் என்று டிரம்ப் மேலும் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதித்த ரஷ்யா, அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு எண்ணெய், பெட்ரோலியப் பொருள்களை வழங்கத் தயாராக இருப்பதாக புட்டின் பின்னர் கூறினார். ஆனால் அவரது அறிக்கையில் அளவுகள் குறிப்பிடப்படவில்லை.

இருப்பினும், ரஷ்யா அந்த அளவு டீசலை வழங்க முடியுமா என்றும் அவ்வாறு செய்வது அமெரிக்கப் பயனீட்டாளருக்கான விலைகளை எந்த அளவிற்கு குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, தங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானதாக இருப்பதாகவும் உக்ரேனுக்கு ஆதரவளிக்கவும் நீடித்த அமைதியை நிலைநாட்டவும் அனைத்துலக நட்பு நாடுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படப்போவதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்ஏற்றுமதிசுத்திகரிப்புஉக்ரேன்