வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் நேரில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமது முதல் அதிபர் பதவிக்காலத்தில் கிம்முடன் ஏற்படுத்திக்கொண்டதாக அவர் கூறிக்கொள்ளும் சுமுகமான உறவைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், கிம் ஜோங் உன்னுடன் நல்லுறவைப் பேணுவது முக்கியம் என்று குறிப்பிட்டதுடன், வடகொரியாவிடம் தற்போது 57 சக்திவாய்ந்த அணுவாயுதங்கள் இருப்பதாகக் கணக்கிட்டுக் கூறினார்.
வடகொரியாவின் அணுவாயுத இருப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஒருவர் இவ்வளவு துல்லியமான எண்ணிக்கையைக் பகிரங்கமாகக் குறிப்பிடுவது இதுவே முதன்முறையாகும்.
அமெரிக்கா-தென்கொரியா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளைக் குறைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததும், வடகொரியா மீதான அவரது திடீர் கவனம் ஆசிய நட்பு நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், ஈரான் போர் மந்தமடைந்துள்ள சூழலில், அதிபர் டிரம்ப் தமது வெளியுறவுக் கொள்கையில் ஒரு பெரிய சாதனையைப் பதிவு செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கு எதிரான போரை நியாயப்படுத்தி வரும் அதிபர் டிரம்ப், வடகொரியத் தலைவரைச் சந்திப்பதற்கான தமது திட்டத்தைத் தற்காத்துப் பேசினார். வடகொரியாவின் அணுவாயுதப் பெருக்கத்திற்கு முந்தைய நிர்வாகங்களே காரணம் என்று சாடிய அவர், திரு கிம்முடன் தாம் மிகச் சிறந்த முறையில் சுமுகமாகச் செல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு உச்சநிலை மாநாட்டின்போது இந்தச் சந்திப்பு நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா அதிகாரபூர்வமாக வடகொரியாவை அணுவாயுத நாடாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட 57 அணுவாயுதங்கள் என்ற எண்ணிக்கை, முந்தைய அமெரிக்க அரசு மற்றும் சிந்தனைக் குழுக்களின் மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகிறது.
2018 முதல் 2019 வரை அதிபர் டிரம்ப், திரு கிம் இடையே மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலை மாநாடுகள் நடைபெற்றபோதிலும், அணுவாயுதக் குறைப்பு விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
இதனிடையே, அதிபர் டிரம்ப், திரு கிம் இடையே தொடர்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று திரு கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவந்த செய்திகள் குறித்து கருத்துரைத்த அவர், தலைவர்களிடையே நேரடித் தொடர்புகள் இருப்பது பற்றி தாம் முற்றிலும் அறியவில்லை எனக் குறிப்பிட்டார்.
இருப்பினும், தமது சகோதரர் இன்னமும் அதிபர் டிரம்ப்புடன் நல்ல நினைவுகளையும் உணர்வுகளையும் கொண்டுள்ளதாகவும் இரு தலைவர்களிடையிலான உறவு சிறப்பாகவே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


