வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கக் கொள்முதல்களில் இருந்து கனடியப் பொருள்களை நீக்குமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், அவர் இந்தத் திடீர் நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
அதிபரின் கையொப்பமிட்ட உத்தரவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க நிறுவனங்களுக்குக் கனடியச் சந்தையில் தடைகள் விதிக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கனடியப் பொருள்களை வாங்குவோம்’ என்ற கொள்கை மூலம் அமெரிக்க நிறுவனங்களைக் கனடா தடுப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தக அமைதி ஆகஸ்ட் மாதம் முறிந்ததைத் தொடர்ந்து, பதிலுக்குப் பதில் என்ற ரீதியில் இரு தரப்பும் வரி விதிப்புகளை அறிவித்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செப்டம்பர் 16ஆம் தேதி ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன், கனடாவைத் தங்களது ‘இணை உறுப்பினராகச்’ சேர்த்துக்கொள்ள முன்வந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திரு.டிரம்ப், இது பகைமைச் செயல் என்று சாடினார். மேலும், ஐரோப்பியப் பொருள்கள்மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக, அமெரிக்க விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்கும் கனடா முழுமையான நியாயத்தை வழங்காவிட்டால், அரசாங்கக் கொள்முதலில் இருந்து கனடியப் பொருள்கள் நீக்கப்படும் என்று திரு.டிரம்ப் எச்சரித்திருந்தார்.
‘மல்டிபிள் அவார்ட் ஷெட்யூல்’ எனும் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் விற்பனையாகும் இத்தகைய பொருள்களின் மதிப்பு $50 பில்லியனுக்கும் (S$63.9 பில்லியன்) அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
