தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்பிடம் மார்க் கார்னி: கனடா விற்பனைக்கு அல்ல

2 mins read
6dcaf24b-f0a5-4f2a-9e06-915580a10bfd
அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டடம் பின்னணியில் டிரம்ப்பைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் ‘கனடா விற்பனைக்கு அல்ல, ஒரு போதும் விற்க மாட்டோம்’,” என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் மார்க் கார்னிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற கார்னி, டிரம்புக்கு எதிராக உறுதியுடன் இருக்க வாக்குறுதி அளித்திருந்தார்.

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில் அது பற்றி பேச கார்னி வாஷிங்டனுக்கு வந்திருந்தார்

சந்திப்பின்போது, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான ‘அற்புதமான திருமணத்தை’ டிரம்ப் முன்மொழிந்த நிலையில் அதற்கு முன்னாள் மத்திய வங்கியாளரான கார்னி உறுதியான தொனியில் பதிலளித்தார்.

ஒரு காலத்தில் நெருக்கமான நாடுகளாக இருந்த அமெரிக்காவும் கனடாவும் டிரம்ப்பின் வரி விதிப்புக்குப் பிறகு இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓவல் அலுவலகத்தில் நேரடியாகச் சந்தித்தபோது ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் தாராளமாக புகழ்ந்து கொண்டனர்.

கனடா, மெக்சிகோ பொருள்களுக்கு டிரம்ப் 25 விழுக்காடு வரியை அறிவித்திருந்தார். குறிப்பாக கார்களை இலக்காகக் கொண்டு வரி விதிக்கப்பட்டது.

இதற்கு, ஃபென்டானில் போதைப் பொருளை அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்படுவதை நிறுத்த கனடா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

கனடாவின் எஃகு, அலுமினியம் ஆகியவற்றுக்கும் இதே போன்ற வரி விதிக்கப்பட்டது.

செவ்வாய்க் கிழமை சந்திப்பு, ஏப்ரல் 28ஆம் தேதி பொதுத் தேர்தலில் கார்னி வெற்றி பெற்ற பிறகு நடந்த முதல் சந்திப்பாகும்.

இரு தலைவர்களின் பேச்சு கனிவுடன் தொடங்கியது. டிரம்ப், கார்னியை மிகவும் திறமையானவர் என்று குறிப்பிட்டார்.

அதற்கு கார்னி, உருமாற்றும் தலைவர் என்று டிரம்பை புகழ்ந்தார்.

ஆனால் அமெரிக்காவின் ஒரு பகுதியாக கனடா இருப்பது சிறந்தது என்று டிரம்ப் வாக்குவாதத்தைத் தொடங்கியதும் இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.

கார்னி கவனமாகப் பதிலளித்தார்.

“சொத்துச் சந்தையில் சில இடங்கள் ஒரு போதும் விற்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார் கார்னி.

கனடா விற்பனைக்கு அல்ல, ஒரு போதும் விற்கப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒருபோதும் இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள் என்று டிரம்ப் அவரிடம் கூறினார்.

இந்நிலையில் வரி விதிப்பை அகற்றுவது குறித்து ஆக்ககரமான பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை.

இருவரும் தொடர்ந்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 760 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட பொருள்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. கனடா, மெக்சிகோவுக்குப் பிறகு அமெரிக்காவின் 2வது ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்