சோல்: தென்கொரியாவுடன் இணைந்து நடத்தும் கூட்டுப் போர்ப் பயிற்சிகளைக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து குறித்து தென்கொரிய அதிபர் அலுவலகமான ‘புளூ ஹவுஸ்’ பரிசீலித்து வருகிறது.
அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டால், இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அது வழிவகுக்கும் என்று தென்கொரியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்க-தென்கொரிய ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் திட்டமிட்டபடி திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கிய கூட்டுப் பயிற்சிகளின் விவரங்கள் குறித்தும் அமெரிக்காவுடன் தொடர்ந்து அரசதந்திர ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தென்கொரியா தெரிவித்தது.
முன்னதாக, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தாம் வைத்துள்ள நல்லுறவைச் சுட்டிக்காட்டிய அதிபர் டிரம்ப், வடகொரியாவின் சாத்தியமான தாக்குதலை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள் பொருத்தமற்றவை மற்றும் பகைமை கொண்டவை என்று குறிப்பிட்டிருந்தார்.
பயிற்சிகளை முற்றிலும் ரத்து செய்ய காலதாமதமாகிவிட்டதால், அவற்றைக் கணிசமாகக் குறைக்குமாறு அமெரிக்கத் தற்காப்புச் அமைச்சர் பீட் ஹெக்செத்திற்கு அவர் உத்தரவிட்டார்.
இருப்பினும், தற்காப்பு அமைச்சு அறிவித்தபடி போர்ப் பயிற்சிகள் திட்டமிட்டபடி தொடங்கியுள்ளன. உறுதியான கூட்டுத் தற்காப்பு நிலையைப் பேணுவதில் அமெரிக்காவுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பு தொடரும் எனத் தென்கொரியா உறுதியளித்துள்ளது.
ரஷ்யா-உக்ரேன் போரில் பங்கேற்றுப் பயிற்சி பெற்ற வடகொரியப் படைகளை எதிர்கொள்ளும் பாவனையில் இந்தப் பயிற்சிகள் அமையும். 18,000 தென்கொரிய ராணுவ வீரர்களும் அமெரிக்கப் படைகளும் பங்கேற்கும் இப்பயிற்சியில் ஆளில்லா வானூர்திப் போர்முறை, ஜிபிஎஸ் முடக்கம் மற்றும் இணையத் தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.


