வாஷிங்டன்: ஈரானுடன் மூண்டுள்ள போரால் முடக்கப்பட்ட முக்கியக் மகப்பல் வர்த்தகத் தடமான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வல்லரசு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
பாக்தாத்தில் அமெரிக்கத் தூதரகமும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் முக்கியமான எரிசக்தி வசதியும் தாக்கப்பட்டுள்ள நிலையில் திரு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
முக்கிய எண்ணெய்க் கிடங்கு அமைந்துள்ள ஃபுஜைரா பகுதியில் சனிக்கிழமை (மார்ச் 14) மிகப் பெரிய கரும்புகை கிளம்பியதாகத் தகவல் வெளிவந்தது. அத்துடன் குவைத்தில் அனைத்துலக விமான நிலையம், வானூர்திகளால் தாக்கப்பட்டது.
நாடுகள் ஒன்றுசேர அழைப்பு
ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள், எண்ணெய்க் கப்பல்களுக்குத் துணையாக விரைவில் செல்லத் தொடங்கும் எனத் திரு டிரம்ப் தெரிவித்தார்.
நீரிணையைப் பாதுகாப்பாகவும் போக்குவரத்துக்குத் திறந்த நிலையிலும் வைத்திருக்க அமெரிக்காவுடன் பல நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்பும் என்று திரு டிரம்ப், சனிக்கிழமை தமது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இவ்வாறு தங்கள் ராணுவக் கப்பல்களை அனுப்பவேண்டுமெனத் திரு டிரம்ப் ஊக்குவித்தார்.
எந்தத் தரப்பு வெற்றிபெறும் என்பதை முடிவாகச் சொல்லப்போகும் காலகட்டத்தை இந்தப் போர் எட்டவுள்ளதாக இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார். தேவைப்படும் வரை இந்தப் போர் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையே அமெரிக்கக் குடிமக்கள் ஈராக்கைவிட்டு வெளியேறும்படி தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், மத்திய கிழக்கு வட்டாரத்திலுள்ள 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வன்முறை முடுக்கும் வார்த்தைகள்
இதற்கிடையே, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையான கார்க் தீவு மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேலும் தாக்குதல்களை நடத்த மிரட்டியுள்ளார்.
பதிலடி தரப்போவதாக டெஹ்ரான் சூளுரைத்திருக்கும் வேளையில் கார்க் தீவின்பெரும்பகுதி தரைமட்டமாக்கப்பட்டதாகத் திரு டிரம்ப் தெரிவித்தார். மேற்கொண்டு பல தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
விளையாட்டுக்காக (கார் தீவை) மேலும் சில முறை நாங்கள் தாக்கக்கூடும், என்று அவர் கூறினார்.
வன்முறையை மேலும் மோசமடைவதற்கான அறிகுறியாக திரு டிரம்ப்பின் வார்த்தைகள் காணப்படுகின்றன. முன்னதாக, கார் தீவிலுள்ள ராணுவத் தளங்களை மட்டும் அமெரிக்கா குறிவைப்பதாக அவர் கூறியிருந்தார்.

