எச்1பி விசாவின் கூடுதல் கால அவகாசத்தை முடிவுக்குக் கொண்டு வரும் டிரம்ப்

எச்1பி விசாவின் கூடுதல் கால அவகாசத்தை முடிவுக்குக் கொண்டு வரும் டிரம்ப்

2 mins read
சிங்கப்பூர், சிலி நாடுகளுக்கான எச்1பி1 சிறப்பு விசா வைத்திருப்பவர்கள் உட்பட பல்வேறு பிரிவுத் தற்காலிகப் பணியாளர்களுக்கும் இம்மாற்றம் பொருந்தும்.
47c70bb6-610d-4fb9-bba2-d3544a444f55
எச்-1பி சில குறிப்பிட்ட தற்காலிகப் பணி விசா வைத்திருப்பவர்கள், தங்களது பணிக் காலம் முடிந்தவுடன் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவில் எச்1பி உள்ளிட்ட தற்காலிக வேலை விசாக்களில் பணிபுரிபவர்கள் வேலை இழந்தால், புதிய வேலையைத் தேட வழங்கப்பட்டு வந்த 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த அதிரடித் திட்டத்தின்படி, பணி ஒப்பந்தம் முடிந்தவுடன் வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், அந்நாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு வல்லுநர்களும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 60 நாள் அவகாசம், பணி இழக்கும் வெளிநாட்டினர் வேறு வேலை தேடவோ அல்லது வீடு, பிள்ளைகளின் கல்வி போன்ற குடும்பப் பொறுப்புகளை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பவோ அவசியமான ஒன்றாக இருந்து வந்தது.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதே இந்நடவடிக்கையின் முதன்மை நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பதிலாகத் தகுதியான அமெரிக்கர்களுக்கு அந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படலாம் அல்லது நிறுவனங்கள் உரிய விண்ணப்ப முறைகள் மூலம் மீண்டும் அவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டியிருக்கும்.

எச்1பி விசாக்கள் தவிர்த்து, சிங்கப்பூர், சிலி நாடுகளுக்கான எச்-1பி1 சிறப்பு விசா வைத்திருப்பவர்கள் உட்பட பல்வேறு பிரிவுத் தற்காலிகப் பணியாளர்களுக்கும் இம்மாற்றம் பொருந்தும்.

2025 ஜனவரியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிபர் டோனல்ட் டிரம்ப், சட்டபூர்வக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்த விசா கட்டணங்களை உயர்த்தியதுடன், பல புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். இந்த வரைவு விதிமுறைகள் இறுதியாக்கப்படுவதற்கு முன்பாக, இரண்டு மாத காலத்திற்குப் பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படவுள்ளன.

எனினும், பத்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றி வரும் வெளிநாட்டினரைக் குறுகிய காலத்தில் வெளியேறக் வற்புறுத்துவது நிறுவனங்களின் மனிதவள நிர்வாகத்தையும், வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என மனித உரிமை அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்எச்1பிஅமெரிக்காடோனல்ட் டிரம்ப்விசாசிங்கப்பூர்