துருக்கியிலிருந்து ரகசியமாக வேறொரு விமானத்தில் சென்றதற்கு டிரம்ப் விளக்கம்

துருக்கியிலிருந்து ரகசியமாக வேறொரு விமானத்தில் சென்றதற்கு டிரம்ப் விளக்கம்

2 mins read
82b5290e-4f75-41c2-b537-ec382349873e
ஒஹையோவிலிருந்து திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுத் தளத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து தரையிறங்கிய பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களிடம் பேசினார்.  - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் துருக்கியிலிருந்து ரகசியமாக வேறொரு விமானத்தில் தாம் அழைத்துச் செல்லப்பட்ட முடிவைப் பற்றிய குறைகூறல்களை நிராகரித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அதிபர் இருப்பதாக வெள்ளை மாளிகை முதலில் குறிப்பிட்டிருந்தது. ஆயினும் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் காரணமாக ரகசிய சேவைப் பிரிவும் ராணுவமும் மாற்று ஏற்பாட்டைச் செய்ததாகத் திரு டிரம்ப் கூறினார்.

“அவர்கள் ஒரே மாதிரியான பாதுகாப்புக் கொண்ட மற்றொரு விமானத்தில் நான் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே நான் அதைச் செய்தேன். அவர்கள் சொல்வதை நான் செய்கிறேன்,” என்றார் அவர்.

ஒஹையோவிலிருந்து திரும்பிய திரு டிரம்ப், வாஷிங்டனுக்கு வெளியே உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டுத் தளத்தில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து தரையிறங்கிய பிறகு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) செய்தியாளர்களிடம் பேசினார்.

‘வாஷிங்டன் போஸ்ட்’ முதன்முதலில் வெளியிட்ட இந்த விரிவான திட்டம், டிரம்ப்பிற்கு எதிராக ஈரான் விடுத்த படுகொலை அச்சுறுத்தலின் காரணமாகச் செயல்படுத்தப்பட்டது.

அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சநிலை மாநாட்டிலிருந்து திரு டிரம்ப் தங்களுடன் அமெரிக்காவிற்குத் திரும்புகிறார் என்ற எண்ணம் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்த செய்தியாளர்கள், வெள்ளை மாளிகை ஊழியர்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் இந்த ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்துத் திரு டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.

“அங்கு ஏதோ ஓர் அச்சுறுத்தல் இருந்தது என்று நினைக்கிறேன். அதைப் பற்றி நான் அதிகம் கேட்கவில்லை. எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருகின்றன,” என்று அவர் பதிலளித்தார்.

துருக்கியில் இருந்து புறப்பட்டபோது ரகசியமாக வேறொரு விமானத்திற்கு மாற்றிவிடப்பட்டதைத் திரு டிரம்ப் உறுதிப்படுத்தினார். ஆனால் அச்சுறுத்தலின் தன்மையைப் பற்றி விரிவாகக் கூற அவர் மறுத்துவிட்டார்.

“எனக்குத் தெரியாது, உண்மையில் நான் பறந்த விமானம்தான் அதிக ஆபத்தில் இருந்தது என்று நினைக்கிறேன்,” என்றார் திரு டிரம்ப்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் ஆறாவது மாதமாக நீடிக்கிறது. இந்நிலையில், ஈரானின் தாக்குதல் முயற்சிகளிலிருந்து அதிபரைப் பாதுகாக்க அமெரிக்க அரசாங்கம் ஆன அனைத்தையும் செய்யும் என்பதை இந்தச் சம்பவம் காட்டுவதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்விமானம்சேவைராணுவம்துருக்கிவெள்ளை மாளிகை