வாஷிங்டன்: தமது இறக்குமதி வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அண்மைக் காலமாக அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) எச்சரிக்கை விடுத்தார்.
அவ்வாறு செய்யும் நாடுகள் மீது மற்ற வர்த்தகச் சட்டங்களின்கீழ் கணிசமான அளவு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அவர் மிரட்டியுள்ளார்.
வர்த்தகப் பங்காளிகள் மீது தாம் உரிமக் கட்டணங்கள் (licence fees) விதிக்கக்கூடும் என்றும் அவர் பல்வேறு சமூக ஊடகப் பதிவுகளில் தெரிவித்தார். வரிவிதிப்பு தொடர்பில் திரு டிரம்ப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற நிச்சயமற்ற சூழலால் உலகப் பொருளியல் பாதிக்கப்பட்டதுடன் பங்குகளின் விலை சரிந்தது.
“உச்ச நீதிமன்றத்தின் நம்ப முடியாத முடிவை வைத்துக்கொண்டு சீண்டிப் பார்க்க நினைக்கும் நாடுகள் மீது கணிசமான அளவு அதிகமாக வரி விதிக்கப்படும். இன்னும் சொல்லப்போனால் வரி விகிதம் அண்மையில் அவை ஒப்புக்கொண்டதைவிட அதிகமாக இருக்கும். குறிப்பாகப் பற்பல ஆண்டுகளாக அமெரிக்காவை ‘சூறையாடும்’ நாடுகளுக்கு இது பொருந்தும்,” என்று திரு டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
அனைத்துலக அவசரகால பொருளியல் அதிகாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட வரிகளை நீதிமன்றம் என்னதான் நிராகரித்தாலும், மற்ற சட்டபூர்வமான வழிகளில் கூடுதல் வீரியத்துடன் சட்டச் சிக்கல் அதிகமின்றி தம்மால் வரி விதிக்க முடியும் என்று அவர் எடுத்துரைத்தார்.
வர்த்தகப் பங்காளிகள் மீது அமெரிக்கா உரிமக் கட்டணங்கள் விதிக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார். ஆனால், அவர் மேல்விவரம் ஏதும் வழங்கவில்லை.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எல்லாப் பொருள்கள் மீதும் திரு டிரம்ப் தற்காலிகமாகப் புதிய 15 விழுக்காட்டு வரி விதித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து வாக்களிப்பதை ஐரோப்பிய நாடாளுமன்றம் திங்கட்கிழமை ஒத்திவைத்தது.

