வாஷிங்டன்: கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களின்மீதான வரியை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
காலஞ்சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனல்ட் ரீகனின் காணொளியைப் பயன்படுத்தும் வரி எதிர்ப்பு விளம்பரம், கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து திரு டிரம்ப் அவ்வாறு கூறினார்.
அமெரிக்கர்கள் ஒவ்வொருவரையும் வர்த்தக வரிகள் பாதிக்கும் என்று திரு ரீகன், 1987ல் கூறிய காணொளியை அந்த விளம்பரம் கொண்டிருந்தது.
இதனால் அதிருப்தியடைந்த திரு டிரம்ப், “அவர்கள் உண்மையைக் கடுமையாகத் திரித்து வெறுப்புடன் செயல்பட்டதால் நான் கனடா மீதான வர்த்தக வரியைக் கூடுதலாக 10 விழுக்காடு உயர்த்துகிறேன்,” என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றின்வழி சனிக்கிழமை அறிவித்தார்.
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்து திரு டிரம்ப், வியாழக்கிழமையன்று (அக்டோபர் 23) விலகியதை அடுத்து அந்த விளம்பரம் மீட்டுக்கொள்ளப்படும் என்று ஒண்டாரியோ மாநில முதல்வர் டக் ஃபோர்டு கூறினார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரவேண்டும் என்பதற்காகக் கனடியப் பிரதமர் மார்க் கார்னியிடம் கலந்துரையாடிய பிறகு விளம்பரத்தை மீட்கும் முடிவை எடுத்துக்கொண்டதாகத் திரு ஃபோர்டு கூறினார்.
உலக நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்ததை அடுத்து அமெரிக்காவுடன் இதுவரை உடன்பாட்டை நிறைவு செய்யாத ஒரே ஜி7 நாடாக கனடா தற்போது உள்ளது.
எல்லா கனடியப் பொருள்களின்மீதும் அமெரிக்கா 35 விழுக்காடு தீர்வையை விதித்துள்ளது.


