தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ர‌ஷ்ய எண்ணெய் நிறுவனங்கள்மீது தடை விதித்த டிரம்ப்

2 mins read
b517e6f6-6d46-47d8-b2ac-a54db322c416
டிரம்ப்-புட்டின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து தற்போது பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இரண்டு பெரிய ர‌ஷ்ய நிறுவனங்கள்மீது பொருளியல் தடைகளை விதித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை புதன்கிழமை (அக்டோபர் 22) மாலை திரு டிரம்ப் வெளியிட்டார். மேலும் உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டு வர ர‌ஷ்ய அதிபர் புட்டினுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தொடருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பையடுத்து ஐரோப்பிய ஒன்றியமும் ர‌ஷ்யாமீது புதிய பொருளியல் தடைகளை அறிவித்தன.

மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உக்ரேன்மீது ர‌ஷ்யா போர் நடத்தி வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ர‌ஷ்யாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப்பும் ர‌ஷ்ய அதிபர் புட்டினும் புடாபெஸ்ட்டில் நடக்கும் உச்சநிலை மாநாட்டில் சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து தற்போது பொருளியல் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பல மாதங்களாக ர‌ஷ்யாமீது கடுமையான பொருளியல் தடை விதிக்கப்படும் என்று மிரட்டி வந்த அதிபர் டிரம்ப் தற்போது புட்டினுடனான சந்திப்பு ரத்தானதை அடுத்து நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

உக்ரேனில் அமைதியைக் கொண்டு வர எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ர‌ஷ்யா ஒத்துழைக்கவில்லை என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.

“ஒவ்வொரு முறையும் திரு புட்டினுடன் பேசும்போது நன்றாக உரையாடல் நடக்கிறது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை,” என்று திரு டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

“ராஸ்நெஃப்ட், லுக்காயில் ஆகிய நிறுவனங்கள்மீது விதிக்கப்பட்ட தடை சில காலத்திற்கு மட்டுமே, விரைவில் போர் நிறுத்தப்படும் என்று நம்பிக்கையுள்ளது,” என்று அதிபர் டிரம்ப் சொன்னார்.

இரு நிறுவனங்களின் அமெரிக்கச் சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்த இரண்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“அமைதி பேச்சுவார்த்தையின்போது திரு புட்டின் நேர்மையாக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. தற்போதைய நிலைமை ஏமாற்றம் தருகிறது,” என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெஸ்சன்ட் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்