வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு விரைவில் அமலுக்கு வரும் வேளையில் வர்த்தகப் பங்காளிகளுடன் கருணையுடன் நடந்துகொள்ளப்போவதாக திங்கட்கிழமை (மார்ச் 31) அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான மற்ற நாடுகளின் வர்த்தகம் நியாயமற்ற முறையில் இருப்பதாகக் கூறி அதிபர் டிரம்ப் வரிகளை விதித்து வருகிறார். இது உலகளாவிய வர்த்தகக் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதிலிருந்து அதிபர் டிரம்ப், முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரத்தைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிகளை விதித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலடி வரி என்ன என்பது ஏப்ரல் 1ஆம் தேதி இரவு சரியாக அறிவிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
உலகின் மிகக் பெரிய பொருளியல் நாடான அமெரிக்காவை மற்ற நாடுகள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டதால் பதிலடி வரி அவசியம் என்று குடியரசுக் கட்சியின் பெருஞ்செல்வந்தரான அதிபர் வலியுறுத்தியுள்ளார். அது அமெரிக்காவுக்கான விடுதலை நாளாக இருக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
அதிபர் டிரம்ப், பல துறைகளில் வரிகளை விரிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பற்றி மார்ச் 31ஆம் தேதி அவரிடம் கேட்டபோது, “இன்னும் இரண்டு நாள்களில் பார்க்கப் போகிறீர்கள், நாளை இரவு அல்லது ஏப்ரல் 2ஆம் தேதி இரவு அறிவிக்கப்படலாம்,” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் “பொறுமையாக நடந்துகொள்வோம். குறிப்பாக கருணையுடன் இருப்போம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போரை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதன் தொடர்ச்சியாக பெரும் வர்த்தகப் பங்காளிகளான சீனா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ஆத்திரமடைந்து பதில் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் வரி விதிப்புக்கு முன்பே சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களுக்கு இடையே தாராள வர்த்தகத்தை வலுப்படுத்தப் போவதாக மார்ச் 30ஆம் தேதி அறிவித்தன.

