வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் வரி உயர்வை அறிவித்துள்ளார். ஆனால் இந்த வரி உயர்வை 90 நாள்களுக்கு அவர் நிறுத்திவைத்துள்ளார்.
அமெரிக்காவுடன் பல நாடுகள் நியாயமற்ற முறையில் வர்த்தகம் புரிவதாக அதற்கு அதிபர் டிரம்ப் காரணம் கூறியுள்ளார்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“இந்தியாவில் அமெரிக்கப் பொருள்களை விற்பது கடினம். அந்நாடு அமெரிக்காவுடன் வரியில்லாமல் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது,” என்று டோஹாவில் நிர்வாகிகளுடன் நடந்த சந்திப்பில் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக அமெரிக்கா விளங்குகிறது. 2024ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் ஏறக்குறைய $129 பில்லியனாகும்.
தற்போதைய வர்த்தக உபரி இந்தியாவுக்குச் சாதமாக உள்ளது. அதாவது 45.7 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக உபரியை இந்தியா பெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டிரம்ப் கண்டிப்பு
இதற்கிடையே ஐபோன்களை இந்தியாவில் தயாரிக்கப்படுவதை விரும்பவில்லை என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக்கிடம் டிரம்ப் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளை அதிகரிக்க அந்நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு டிரம்ப் அதிருப்தி தெரிவித்ததாகவும் தெரிகிறது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலகட்டத்தில் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி அமெரிக்க டாலர் 22 பில்லியனை எட்டியுள்ளது. இது. முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 60% அதிகம்.
இந்நிலையில் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து டிம் குக்குடன் டிரம்ப் பேசியுள்ளார்.
“நேற்று டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்சினை,” என்று கத்தாருக்குப் பயணம் மேற்கொண்ட திரு டிரம்ப் குறிப்பிட்டதாக புளும்பெர்க் தகவல் தெரிவிக்கிறது.
“அவர் (டிம் குக்), இந்தியாவில் ஐபோன்களைத் தயாரிக்கிறார். அவர், இந்தியாவில் தயாரிப்பதை நான் விரும்பவில்லை,” என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் ஆப்பிள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் கருத்து, இந்தியாவிலிருந்து ஐபோன்களை தயாரித்து அனுப்பும் ஆப்பிள் நிறுவனத்தின் உத்திகளுக்கு நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. வரி விதிப்பு மற்றும் பதற்றம் காரணமாக சீனாவில் தயாரிப்பு தொழிற்சாலைகளை அந்நாட்டுக்கு அப்பாலும் இந்தியா போன்ற நாடுகளில் விரிவுபடுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இல்லை.