வாஷிங்டன்: ஹமாஸ் குழு ஆயுதங்களைக் களையவில்லை என்றால் இஸ்ரேலியப் படைகள் மீண்டும் சண்டையைத் தொடங்குவதற்கு அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
சண்டை நிறுத்த உடன்பாட்டின்படி ஹமாஸ் நடந்துகொள்ளத் தவறினால் தாம் ஒரு வார்த்தை சொன்னால் போதும், இஸ்ரேலியப் படைகள் சண்டையிடத் தெருக்களில் இறங்கிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
சிஎன்என் ஊடகத்திற்கு அளித்த தொலைபேசி உரையாடலில், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட மறுத்தால் என்ன நடக்கும் என்று கேட்கப்பட்டபோது திரு டிரம்ப் அவ்வாறு தெரிவித்தார்.
ஹமாஸ், சண்டை நிறுத்த உடன்பாட்டை மதித்து நடக்கவில்லை என்றால் சண்டையை மீண்டும் தொடங்கப்போவதாக இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்சும் தெரிவித்தார். அத்தகைய சூழலில், ஹமாசை ஒட்டுமொத்தமாக வீழ்த்திப் போரின் அனைத்து நோக்கங்களையும் எட்ட இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
முன்னதாக, காஸாவில் மக்களுக்கு எதிரான வன்முறையை ஹமாஸ் நிறுத்தவேண்டும் என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய கிழக்குத் தளபத்தியம் கேட்டுக்கொண்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாய்ச் செயல்பட்டோர் என ஹமாஸ் குழு கருதுவோரை அதன் பாதுகாப்புப் படைகள் சுட்டுக்கொல்வதாகக் கூறப்படுகிறது.
ஆயுதங்களைக் களையப்போவதாகவோ அதிகாரத்தைக் கைவிடப்போவதாகவோ ஹமாஸ் வெளிப்படையாக எந்த உறுதியும் கொடுக்கவில்லை. காஸா நகரில் ஒரு குழுவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை அந்தக் குழுவினர் கொன்றதாகப் பாலஸ்தீனப் பாதுகாப்பு வட்டாரம் ஒன்று திங்கட்கிழமை தெரிவித்தது.
வன்முறையை உடனே கைவிட்டு அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொல்வதை அந்தக் குழு நிறுத்தவேண்டும் என்று அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியத் தலைவர் பிராட் கூப்பர் கூறினார்.
திரு டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்தின்படி நடந்துகொள்ளுமாறு ஹமாசை அவர் கேட்டுக்கொண்டார். தாமதிக்காமல் ஆயுதங்களைக் கைவிடுமாறும் அட்மிரல் பிராட் கூப்பர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வேளையில் இஸ்ரேலின் ராணுவ உதவி அமைப்பான கோகாட் (COGAT), காஸாவுடனான ராஃபா எல்லைப் பகுதியைத் திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் எகிப்துடன் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியிருக்கிறது. மக்கள் சென்றுவர அது உதவியாக இருக்கும். ராஃபா எல்லைப் பகுதி எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
காஸா வட்டாரத்திற்குள் மனிதநேய உதவிப்பொருள்கள் நுழைவதை மேற்பார்வையிடுகிறது கோகாட். கெரெம் ஷலோம் பகுதி வழியாக உதவிப்பொருள்கள் தொடர்ந்து கொண்டுசெல்லப்படுவதாக அது சொன்னது.