வாஷிங்டன்: ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை, தேவைப்பட்டால் பாதுகாப்பு அளிக்கக்கூடும் என்று அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அதன் தொடர்பில், அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் சொன்னார். அதன்படி, வளைகுடா வட்டாரத்தில் கடல்வழி வர்த்தகத்திற்கு நிதி உத்தரவாதத்தையும் அரசியல் இடர்களைச் சமாளிக்கக்கூடிய காப்புறுதியையும் நிறுவனம் வழங்கும்.
அதிகரித்துவரும் எரிசக்தி விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் எண்ணெய்ச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்கவும் திரு டிரம்ப்பின் நிர்வாகம் எடுத்துள்ள ஆகக் கடும் நடவடிக்கைகளில் ஒன்றாக அது பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்குப் பூசல் மோசமடைந்துவரும் சூழலில், முக்கிய நீர்வழிகளில் கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்துகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளது.
கடந்த வார இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, உலக அளவில் கச்சா எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டுள்ளன. அதனால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் ராணுவப் பாதுகாப்பும் நிதி நிறுவனம் வழங்கும் காப்புறுதியும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த போதுமானவையாக இருக்குமா என்பதில் கப்பல் உரிமையாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் சந்தேகம் உள்ளது.
வளர்ச்சி நிதி நிறுவனம், 2019ல் தொடங்கப்பட்டது. அரசாங்க நிறுவனமான அது, வளரும் நாடுகளில் உள்ள திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
திரு டிரம்ப், பொருளியல் குறித்த தகவல்களை வெளியிடும்போது அமெரிக்கர்களுக்கு எரிபொருள் விலையைக் குறைப்பதுபற்றி முக்கியமாகக் குறிப்பிடுவார்.
தொடர்புடைய செய்திகள்
“என்ன நடந்தாலும் உலகிற்கு எரிசக்தி இடையூறின்றிக் கிடைப்பதை அமெரிக்கா உறுதிசெய்யும்,” என்று திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டும் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட்டும் அமெரிக்க அதிபரைச் சந்தித்து அதுபற்றி விவாதிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.
அமெரிக்கர்கள், குறுகிய காலத்திற்கு அதிக எண்ணெய் விலையைச் சமாளித்தாக வேண்டும் என்று செய்தியாளர்களிடம் திரு டிரம்ப் சொன்னார்.
“ஆனால் போர் முடிந்தவுடன், விலைகள் குறையும். முன்னெப்போதையும்விட இறங்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார் அமெரிக்க அதிபர்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடைத் தவணைக்காலத் தேர்தல் வரவிருக்கிறது. அதில் அதிகாரத்தைக் கைப்பற்றக் குடியரசுக் கட்சியினர் பல முயற்சிகளை எடுத்துவருகின்றனர். எரிசக்தி விலைகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால், அது அந்த முயற்சிகளைக் கீழறுக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

