லண்டன்: உக்ரேனுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா போரிட்டு வருகிறது. இதனால் அந்த நாட்டின் பொருளியல் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி ஏற்றம், அதிக வட்டி, கடன் சுமை, மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளியல் தடை என ரஷ்யாவுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.
தற்போது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ரஷ்ய-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது ரஷ்யாவின் பொருளியலுக்கு உயிரூட்டும் எனக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஆலோசிக்காமல் ரஷ்யாவுடன் பேசி வருகிறார். இதனால் ஐரோப்பிய நாடுகள் குழப்பத்தில் உள்ளன.
மேலும், ரஷ்யா போர் தொடுத்ததற்கு உக்ரேன்தான் காரணம் என்று அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற டிரம்ப் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் ரஷ்யாவின் பொருளியல் மீண்டு வரும் என்று கூறப்படுகிறது.
போர் முடிவுக்கு வந்தால் ராணுவத்திற்காக ரஷ்யா செலவு செய்வது குறைக்கப்படும், அந்த நிதி மக்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்படும் என்று ரஷ்யாவின் மத்திய வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் ஓலெக் வியூஜின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவின் பொருளியல் நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபலின் மதிப்பு அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வரும் நாள்களில் மாஸ்கோ மீதான பொருளியல் தடைகள் சில நீக்கப்படலாம் என்பதால் ரூபலின் மதிப்பு எழுச்சி பெறலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால் பொருளியல் தடைகள் நீக்கப்படும் இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமடையும் என்று ரஷ்யாவுக்கு வாஷிங்டன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.