அங்காரா: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரானுக்குப் பதிலாக தனது நட்பு நாடான ஜப்பானின் பெயரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தவறாகக் குறிப்பிட்டது உலக அரங்கில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக, உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் இணைந்து அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மிகப் பெரிய விமானந்தாங்கிக் கப்பலான ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ மீது ‘இஸ்லாமிய ஜப்பானியக் குடியரசு’ 111 ஏவுகணைகளைப் பாய்ச்சித் தாக்கியதாக அவர் தவறாகக் குறிப்பிட்டார்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாகத் தொடர்ந்த அந்தத் தாக்குதலில் வீசப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் அமெரிக்கப் படையினரால் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.
உண்மையில், ‘இஸ்லாமியக் குடியரசு’ என்ற அதிகாரபூர்வப் பெயரைக் கொண்ட ஈரானுடன் அமெரிக்காவுக்கு அண்மைக் காலமாக மோதல் நிலவி வரும் சூழலில், அதிபர் டிரம்ப் ஈரானுக்குப் பதிலாக ஜப்பானின் பெயரை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவும் ஜப்பானும் மிக நெருங்கிய ராணுவ ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.
மேலும், பரஸ்பர தற்காப்பு ஒப்பந்தத்தின்படி ஏறத்தாழ 60,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஜப்பானில் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டிரம்ப்பின் இந்தத் தவறான பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

