நியூயார்க்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புதிய அனைத்துலக மாணவர்களின் வருகையைத் தடைசெய்யும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நள்ளிரவு உத்தரவு, நிச்சயமற்ற நிலையில் விடப்பட்டுள்ள மாணவர்களிடையே பீதியையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.
ஹார்வர்ட்டைச் சேர்ந்த இரண்டாவது ஆண்டு வெளிநாட்டு மாணவரான ஆல்ஃபிரட் வில்லியம்சன், எப்படியேனும் தம் பல்கலைக்கழகத்தின் கை ஓங்க வேண்டும் என்றும் அடுத்த பள்ளித் தவணைக்குத் தாம் திரும்ப வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.
ஹார்வர்ட் தனது அனைத்துலக மாணவர்களுக்கு நிதியாதரவு அளிப்பதைத் தடுக்க திரு டிரம்ப் விதித்த உத்தரவை அமெரிக்க நீதிபதி ஒருவர் அண்மையில் நீக்கினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டினர் படிப்பதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தடை செய்ய முற்பட்ட திரு டிரம்ப்பின் உத்தரவு, அடுத்த நீதிமன்ற மறுஆய்வுக்கு முன்னரே உடனடியாக, சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஸ்டன் நகரைச் சேர்ந்த நீதிபதி அலிசன் புர்ரோக்ஸ் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே அந்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து 3.2 பில்லியன் டாலர் மானியங்களை நீக்கியுள்ளது.
அந்தப் பல்கலைக்கழகத்திற்கு நிதித் தடை செய்ய முயன்ற அரசாங்கம், அதன் வரிவிலக்கு நிலையையும் ரத்து செய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
வியாழக்கிழமை முற்பகுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், “அமெரிக்காவுக்கு எதிரான, யூதர்களுக்கு எதிரான, பயங்கரவாதத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்களின் உறைவிடம்,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் எபிகெய்ல் ஜாக்சன் சாடினார்.
ஹார்வர்ட்டின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த அமெரிக்க வெளிநாட்டு மாணவர் விசா முறையைப் பாதித்துள்ளதாகக் கூறிய திருவாட்டி ஜாக்சன், அப்பல்கலைக்கழகம் தனது செயல்களின் பின்விளைவுகளை இப்போது சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

