தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கத்தார் வழங்க உள்ள போயிங் சொகுசு விமானம்: ஏற்கும் முடிவில் டிரம்ப்

1 mins read
f0face0a-fad3-4a64-99ff-260afbd0f38a
இந்தத் திட்டத்துக்கு ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கத்தார் அரச குடும்பம் வழங்குவதாக உள்ள போயிங் 747-8 ரக விமானம் ஒன்றைத் தனது அரசு ஏற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த விமானம் பின்னர் அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் என மறுவடிவமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு பெறும் மிகுந்த விலைமதிப்பு மிக்கதான சொகுசு விமானம் அதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது திரு டிரம்ப்பின் பதவிக்காலத்துக்குப் பிறகு அதிபர் டிரம்ப்பின் நினைவுப் பொருளாக வைத்திருக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. போயிங் 747-8 ரக விமானம் ஒன்றின் சந்தை விலை அமெரிக்க டாலர் 400 மில்லியன் (S$519மி.) என்று மதிப்பிடப்படுகிறது.

இந்தத் திட்டம் பெருமளவிலான சட்ட, ஒழுக்க நெறிப் பிரச்சினைகளுக்கு வழிவிடும் என்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட அதிபர் மாளிகை பேச்சாளர் கேரோலின் லிவிட், “வெளிநாட்டு அரசாங்கம் வழங்கும் எந்தவொரு அன்பளிப்பும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஏற்றுக்கொள்ளப்படும். அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் முழு வெளிப்படைத்தன்மைக்கு உட்பட்டு செயல்படும்,” என்று கூறினார்.

விமானம் வழங்கப்படுவது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளுக்கு விளக்கிய கத்தார் அரசு பேச்சாளர் ஒருவர், இந்த விவகாரம் இன்னும் பரிசீலனையில் உள்ளது என்றும் இது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை,” என்றும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்