ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சிறிய உச்சநிலை மாநாட்டை எதிர்பார்த்திருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் திரு புட்டினைத் திரு டிரம்ப் சந்திக்க எண்ணினார்.
இரு தலைவர்களின் வெளியுறவு அமைச்சர்களிடையே நடைபெறவேண்டிய கூட்டம் நிறுத்தப்பட்டதை அடுத்து திரு டிரம்ப்புக்கும் திரு புட்டினுக்கும் இடையிலான சிறிய உச்சநிலைச் சந்திப்பு கைக்கூடவில்லை என்று சிஎன்என் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
உக்ரேனில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் திரு டிரம்ப், காஸாவில் சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்டுவதைவிடவும் இந்தியா பாகிஸ்தான் சண்டையை நிறுத்துவதைவிடவும் சிரமமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
திரு புட்டினுடன் கடந்த வாரம் பேசியதை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவும் சந்தித்துக்கொள்வர் என்று திரு டிரம்ப் கூறினார்.
ஆனால் அந்தச் சந்திப்பு தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அடையாளம் குறிப்பிடாத வெள்ளை மாளிகை அதிகாரி கூறியதாக சிஎன்என் சொன்னது.
திரு ரூபியோவும் திரு லாவ்ரோவ்வும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரம் சொன்னதாகவும் சிஎன்என் சுட்டியது.
திரு ரூபியோவுக்கும் திரு லாவ்ரோவுக்கும் இடையிலான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது எந்த அளவு டிரம்ப்-புட்டின் சந்திப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போதைக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திரு ரூபியோவும் திரு லாவ்ரோவ்வும் திங்கட்கிழமை (அக்டோபர் 20) தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்காவும் ரஷ்யாவும் தெரிவித்தன.
அது ஆக்ககரமான கலந்துரையாடலாக இருந்தது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு சொன்னது.
திரு ரூபியோவுக்கும் திரு லாவ்ரோவ்வுக்கும் இடையிலான சந்திப்பு டிரம்ப்-புட்டின் சந்திப்புக்கு அடித்தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.