தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்-புட்டின் மாநாடு இரு வாரங்களில் நடக்கலாம்

1 mins read
bc256534-f2ac-4bc8-b9c3-157b0bfa2aad
பின்லாந்தில் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சந்திப்பில் அமெரிக்கஅதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புட்டின். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்து உக்ரேன் போர் பற்றி விவாதிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த முடிவு வியாழக்கிழமை (அக்டோபர் 16) எடுக்கப்பட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்த மாநாடு இரண்டு வாரங்களில் ஹங்கேரியின் தலைநகர் புத்தபெஸ்ட்டில் நடக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அதிபர் புட்டினுடன் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஆக்ககரமாக தொலைபேசியில் உரையாடியதாக அதிபர் டிரம்ப் கூறினார்.

உக்ரேனுக்கு புதிய ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கவிருக்கிறது என்ற ரஷ்யாவின் சந்தேகம் வலுப்பெறும் நிலையில் இந்த மாநாடு பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.

ரஷ்யா அந்த மாநாடு நடைபெறுவது குறித்து உறுதி செய்துள்ளது. ஆனால் அதன் தேதி பற்றிய விவரங்களை இருதரப்பும் குறிப்பிடவில்லை.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ராணுவ உதவிகளை நாடி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) அமெரிக்கா செல்லவிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரேனுக்கு சாதகமாக அண்மையில் அமெரிக்க அதிபர் செயல்படுவதுபோல் இருக்கும் நேரத்தில் ரஷ்ய அதிபரை சந்திக்கும் திட்டத்தை திரு டிரம்ப் வெளியிட்டிருப்பது ஐரோப்பிய நாடுகளை கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்