வாஷிங்டன்: இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் இலகுரக லாரிகளுக்கும் அடுத்த வாரம் முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இந்த நடவடிக்கை வாகனங்களின் விலை உயர்வுக்கு வழிவகுப்பதோடு உற்பத்தியைப் பாதிக்கும் என்று வாகனத் தொழில்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதிய வரி விதிப்பு குறித்து புதன்கிழமை (மார்ச் 26) திரு டிரம்ப் கூறுகையில், “அமெரிக்காவில் தயார் செய்யப்படாத எல்லா கார்களுக்கும் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும்,” என்று தமது ஓவல் அலுவலகத்தில் தெரிவித்தார்.
இந்த வரிவிதிப்பு வர்த்தகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் மோசம் செய்யக்கூடியது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயென் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கனடா ஊழியர்கள் மீதான நேரடித் தாக்குதல் இது என்று கனடிய பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் மீண்டும் பதவியில் அமர்ந்த பிறகு அவர் அறிவித்து வரும் வரிவிதிப்புகள் உலகளாவிய வர்த்தகப் போரை அதிகரிக்கும் வகையில் அமைந்து வருகின்றன.
உள்நாட்டில் வரிகளைக் குறைக்க தாம் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றவும் அதற்கான வருவாயை அதிகரிக்கவும் வரிவிதிப்புகளை திரு டிரம்ப் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மேலும், நீண்ட காலமாக சரிவுகண்டு வரும் அமெரிக்கத் தொழில்துறை அடித்தளத்தை மீட்டெடுக்கவும் அவர் புதிய வரிகளை அறிவித்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய வரிகள் மூலமான வருவாய் ஏப்ரல் 3 முதல் வரத்தொடங்கும்.
அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைய காரணமான நாடுகளுக்கு பதிலுக்குப் பதில் வரிவிதிக்கும் திட்டத்தை திரு டிரம்ப் வகுத்துள்ளார்.

