வாஷிங்டன்: இந்திய இறக்குமதிமீதான வரியை 50 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காட்டுக்குக் குறைக்கும் புதிய உடன்பாட்டை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொண்டதற்காகவும் வர்த்தகத் தடைகளைத் தளர்த்தியதற்காகவும் இந்தியாவுக்கு அந்தச் சலுகையைத் திரு டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் உரையாடியதை அடுத்து திரு டிரம்ப் உடன்பாடு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இந்தியா அமெரிக்காவிடமிருந்து உத்தேசமாக வெனிசுவேலாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய்யை வாங்கும் என்றார் திரு டிரம்ப்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாமீது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த 25 விழுக்காட்டு வரிக்கு மேல் கூடுதலாக 25 விழுக்காட்டு வரியை அமெரிக்கா விதிக்க நேர்ந்ததாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார்.
திரு டிரம்பின் ஆக அண்மைய அறிவிப்பால் பகுதி மின்கடத்தி உற்பத்தித் துறையைச் சேர்ந்தோரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தோரும் நிம்மதியடைந்துள்ளனர்.
அமெரிக்காவிடமிருந்து $500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, நிலக்கரி, தொழில்நுட்ப அம்சங்கள், வேளாண் பொருள்கள் ஆகியவற்றை இந்தியா வாங்குகிறது. இனி அதைவிட அதிகமாக இந்தியா கொள்முதல் செய்யவிருப்பதாகத் திரு மோடி வாக்குறுதி அளித்ததாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
“அமெரிக்காவுக்கு எதிரான வரிகளையும் வரிகள் அற்ற தடைகளையும் இந்தியா முழுமையாக நீக்கக்கூடும்,” என்றார் திரு டிரம்ப்
அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு செய்துகொண்ட முக்கிய ஆசிய நாடுகளான ஜப்பானும் தென்கொரியாவும் அமெரிக்க நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்யவேண்டும் என்ற நிபந்தனையை எதிர்கொண்டன.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், இந்தியாவுக்கு அத்தகைய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
“என் அருமை நண்பரான அதிபர் டிரம்ப்பிடம் பேசினேன். இந்திய இறக்குமதிமீதான வரி இனி 18 விழுக்காட்டுக்கு குறைக்கப்பட்டதில் மகிழ்ச்சி,” என்று திரு மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
1.4 பில்லியன் இந்திய மக்களின் சார்பில் திரு டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

