வாஷிங்டன்/துபாய்: ஈரானுடனான போர்நிறுத்த உடன்பாடு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால், நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் அமைதித் திட்டத்திற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
முன்னதாக, மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் திட்டத்தை ஈரான் நிராகரித்ததோடு, பல நிபந்தனைகளையும் விதித்தது. அவற்றை அதிபர் டிரம்ப் ‘குப்பை’ என விமர்சித்துள்ளார்.
லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது இறையாண்மையை வலியுறுத்தியுள்ள ஈரான், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறது.
ஈரானின் இந்தப் பதிலால் ஏப்ரல் 7ஆம் தேதிமுதல் நடப்பிலிருக்கும் போர்நிறுத்த உடன்பாடு ஆபத்தான நிலையில் உள்ளதாகத் திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவர்கள் எங்களுக்கு அனுப்பிய அந்தக் குப்பையைப் படித்த பிறகு, போர்நிறுத்தம் மிகவும் வலுவற்ற நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன். நான் அதை முழுமையாகப் படித்து முடிக்கக்கூட இல்லை,” என்றார்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களைப் பேசுவதற்கு முன்னதாகப் போரை நிறுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டம்.
எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி பாதிப்பு
இந்தப் புவிசார் அரசியல் பதற்றம் காரணம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதால், ஆசியச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 104.50 அமெரிக்க டாலராக உயர்ந்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ‘ஓபெக்’ (OPEC) நாடுகளின் எண்ணெய் உற்பத்தி கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்து, ஏற்றுமதியைக் குறைக்கும் நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்துக் கத்தாரில் செவ்வாய்க்கிழமை (மே 12) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனிடையே, அதிபர் டிரம்ப் புதன்கிழமை சீனா செல்வார் என்றும் அங்குச் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்து ஈரான் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

