நோபெல் அமைதிப் பரிசு வழங்காததால் நார்வேக்கு ‘அழியாத கறை’ ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்

நோபெல் அமைதிப் பரிசு வழங்காததால் நார்வேக்கு ‘அழியாத கறை’ ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்

படம்: ராய்ட்டர்ஸ்

10 Oct 2026 - 3:00 pm

2 mins read

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமக்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படவில்லையே என்று மிகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்று (அக்டோபர் 9) தனது அதிருப்தியை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

நோபெல் குழுவைக் கொண்ட நார்வே நாட்டிற்கு இது ஓர் அவமானமான, சங்கடமான முடிவு என்றும் இதனால் அந்நாட்டிற்கு அழியாத கறை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல், காஸாவில் இனப்படுகொலை செய்ததாக முடிவெடுத்த ஐ.நா அறிக்கையை மேற்பார்வையிட்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நவி பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டிற்கான நோபெல் அமைதிப் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே டிரம்ப் நார்வே மீதான தனது கோபத்தைக் காட்டினார்.

நியூயார்க்கின் சிராகியூஸ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் பேசிய டிரம்ப், நவி பிள்ளையை ஒரு ‘புதிரான நபர்’ என்று குறிப்பிட்டார்.

“நான், அந்த நபரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. யாருக்கும் அவரைப் பற்றித் தெரியாது,” என்றார் அவர்.

தனது அதிபர் பதவிக்காலத்தின் ஒவ்வோர் ஆண்டிலும் தனக்கு நோபெல் பரிசு வழங்கப்படவில்லையே என்று டிரம்ப் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறார்.

“இது நார்வே நாட்டிற்கும் இத்தகைய அவமானகரமான மற்றும் சங்கடமான முடிவை எடுத்த நபர்களுக்கும் அழியாத கறையை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.

வடகொரியா-தென்கொரியா, ஜப்பான்-வடகொரியா, சீனா-தைவான் இடையே போர் மூள்வதைத் தடுக்க தான் உதவியதாகவும், தான் தீர்த்து வைத்ததாகக் கூறி பல மோதல்களையும் அவர் பட்டியலிட்டார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்
டோனல்ட் டிரம்ப்நோபெல்அமைதிநார்வே

தொடர்புடைய செய்திகள்