டீசல் ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பது குறித்து டிரம்ப் தீவிர பரிசீலனை

டீசல் ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பது குறித்து டிரம்ப் தீவிர பரிசீலனை

படம்: ஏஎஃப்பி

28 Sep 2026 - 1:08 pm

2 mins read

சிகாகோ: அமெரிக்காவில் டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டீசல் ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், அரசாங்க அதிகாரிகள் மாற்று நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

கார்களுக்கான பெட்ரோல் விலையைச் சற்று உயர்த்தக்கூடும் என்பதால் டீசல் விலையேற்றம் குறித்துக் கவனமாக ஆராய்ந்து வருவதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாலும் ரஷ்ய எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான உக்ரேனின் தாக்குதல்களாலும் உலகளவில் எரிபொருள் சந்தை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அறுவடைக்காலத்தில் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துமாறு பல அமெரிக்க மாநிலங்களின் ஆட்சியாளர்கள் திரு டிரம்ப்பிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் டீசல் ஏற்றுமதி நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு மில்லியன் பீப்பாய்கள் என்ற வாராந்தரச் சாதனையை எட்டியது.

இந்நிலையில், குறுகியகால டீசல் ஏற்றுமதித் தடையால் ஏற்படும் விளைவுகள் குறித்து தேசியப் பொருளியல் மன்றத்தின் இயக்குநர் கெவின் ஹேசட், நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்க வணிகப் பேராளர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில், ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக டீசலுக்கான கலால் வரியைத் தற்காலிகமாக ரத்துசெய்யலாம் என்று எண்ணெய் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும் தொழிற்குழுமங்களும் ஆலோசனை தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் அமெரிக்காவில் டீசல் சில்லறை விற்பனை விலையானது இதற்குமுன் இல்லாத அளவாகச் சராசரியாக ஒரு கேலனுக்கு (3.785 லிட்டர்) 6.50 டாலராக (S$8.31) உயர்ந்தது.

முன்னதாக, ஏற்றுமதிக்கு அரசாங்கம் தடைவிதிப்பதற்குப் பதிலாக நிறுவனங்களே முன்வந்து ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

டீசல் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடைவிதித்தால் பிரேசில், பிரிட்டன் போன்ற அதன் நட்பு நாடுகள் எரிபொருளைப் பெற அவசர நிலைக்குத் தள்ளப்படும். அதேநேரம், அமெரிக்காவில் டீசல் விலை பெரிதும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடீசல்பெட்ரோல்ஏற்றுமதிடோனல்ட் டிரம்ப்