நியூயார்க்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திருவாட்டி மிசெல் ஒபாமாவை சாடியுள்ளார்.
அண்மையில் திருவாட்டி மிசெல், கமலா ஹாரிசை ஆதரித்து மிச்சிகனில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசினார். அப்போது டிரம்ப்பின் மனநலம் குறித்து அவர் தாக்கிப் பேசினார்.
டிரம்பிற்கு போதுமான திறமை இல்லை, எரிச்சல் அடையும் விதமாக நடந்துகொள்பவர், அவரது மனநலம் குன்றி வருகிறது, பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார் என்றும் கூறினார்.
அதற்கு பதிலடி தரும் விதமாக திங்கட்கிழமை (அக்டோபர் 28) இரவு அட்லாண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் டிரம்ப் பேசினார்.
“மிசெல் மிகப்பெரும் தவறு செய்துவிட்டார், நான் எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடக்க முயற்சி செய்யும் நபர். ஆனால் மிசெல் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டார்,” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும் கமலா ஹாரிசை வெறுப்பைத் தூண்டுபவர் என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப் பேசும் போது கூட்டத்தில் இருந்த மக்கள் கமலா ஹாரிசை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். அதற்கு பதிலளித்த டிரம்ப் ‘நாம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தமது முழுகவனமும் அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் தான் உள்ளது என்று டிரம்ப் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

