வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து திரு டோனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) அமெரிக்காவின் அனைத்துலக நிவாரண ஊழியர்கள் அமைப்பின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளது டிரம்ப் நிர்வாகம்.
10,000க்கும் அதிகமாக உள்ள அனைத்துலக நிவாரண ஊழியர்களில் கிட்டத்தட்ட 300 பேர் மட்டும் போதும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அதனால் செலவுகள் கூடுகிறது என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறிவருகிறது.
ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏலன் மஸ்க் தலைமையில் ஒரு அணி அமைத்துள்ளது டிரம்ப் நிர்வாகம்.
ஆப்ரிக்காவில் 12 பேர், ஆசியாவில் 8 பேர் போதும் என்று டிரம்ப் நிர்வாகம் கணக்கிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஊழியர்கள் எதிர்ப்பு:
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து அனைத்துலக நிவாரண ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது மூர்க்கத்தனமான ஒன்று என்று அமைப்பின் மூத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் மக்களுக்கு உதவி செய்தவர்களை உடனடியாக ஆட்குறைப்பு செய்வது சரியானது அல்ல. இதனால் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே பல ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து அனைத்துலக நிவாரண ஊழியர்கள் அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின்செயல் சட்டவிரோதமானது என்று வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் அந்த அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது.
அனைத்துலக நிவாரண ஊழியர்களில் மூன்றில் இருவர் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள். 2023ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 40 பில்லியன் அமெரிக்க டாலரை அந்த அமைப்பு நிர்வாகம் செய்துள்ளது.

