வாஷிங்டன்: பிரபல முதலீட்டாளர் ஸ்காட் பெஸென்ட்டை அமெரிக்காவின் அடுத்த நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப் நவம்பர் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.
நிதி அமைச்சர் என்கிற முறையில் பொருளியல், நிதி ஒழுங்குமுறை, அனைத்துலக விவகாரங்கள் ஆகியவற்றில் அவருக்கு அதிக செல்வாக்கு இருக்கும்.
“அமெரிக்காவின் 79வது நிதி அமைச்சராக ஸ்காட் பெஸென்ட்டை முன்மொழிவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், புவிசார்ந்த அரசியல் மற்றும் பொருளியல் நிபுணர்களில் அவரும் ஒருவர்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து திரு பெஸென்ட் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
அவர் இதற்கு முன்பு, வரி தொடர்பான சீர்திருத்தத்துக்குக் குரல் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வீடமைப்பு, நகர மேம்பாட்டுத்துறைக்குயின் தலைவராக முன்னாள் தேசிய அமெரிக்கக் காற்பந்து லீக் ஆட்டக்காரரான திரு ஸ்காட் டர்னரை டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது வெள்ளை மாளிகை வாய்ப்பு, புதுப்பிப்பு மன்றத்தின் நிர்வாக இயக்குநராகத் திரு டர்னர் சேவையாற்றினார்.
“முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்குத் திரு டர்னர் தலைமை தாங்கினார். அதன்மூலம் அமெரிக்காவில் உள்ள மிகவும் வசதிகுறைந்த சமூகங்களை அவர் உருமாற்றினார்,” என்று டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
டிரம்ப்பின் முன்மொழிதலை அமெரிக்க செனட் சபை ஏற்றுக்கொண்டால் அமெரிக்கர்களின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தேசிய அளவிலான கொள்கைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் துறைக்கு திரு டர்னர் தலைமை தாங்குவார்.
இதில் கட்டுப்படியான விலையில் வீடுகளைக் கட்டித் தருவது, வசதி குறைந்த அமெரிக்கர்களுக்கு உதவுவது, வீடமைப்பு தொடர்பில் பாரபட்சநிலை நிலவாமல் பார்த்துக்கொள்வது ஆகியவை அடங்கும்.
அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்துக்குத் தலைமை தாங்கி அதை வழிநடத்த அறுவை சிகிச்சை நிபுணரும் எழுத்தாளருமான டாக்டர் மார்ட்டின் மக்கரேயை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
பால்ட்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் டாக்டர் மக்கரே மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
அமெரிக்க விவசாயத்துறை அமைச்சராக முன்னாள் செனட்டர் கெலி லோஃப்லரை டிரம்ப் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிஎன்என் செய்தி நிறுவனம் நவம்பர் 23ஆம் தேதியன்று தெரிவித்தது.
அமெரிக்காவின் நிர்வாகம், வரவுசெலவுத் திட்ட அலுவலகத்துக்குத் தலைமை தாங்க ரஸ் வோட்டை டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.
இத்துறை அமெரிக்க அதிபரின் கொள்கைகளில் எந்தெந்த கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை தீர்மானித்து அவற்றுக்கு எவ்வாறு நிதி ஒதுக்குவது என்பதை முடிவு செய்யும்.