வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான தன்னார்வப் பாதுகாப்புத் தரநிலைகளை உருவாக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 29) தெரிவித்தார்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு மற்றும் உள்ளூர்ச் சமூகங்களில் அதனாலான தாக்கம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையிலும், தரவு மையங்களை வேகமான முறையில் விரிவாக்குவதற்கும் அவர் மீண்டும் தமது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் அதிபர் டிரம்ப் இந்த விவரங்களை வெளியிட்டார்.
தங்கள் நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், அவற்றை வடிவமைத்தவர்களின் முதன்மை நோக்கத்தின்படியே சரியாகச் செயல்படுகின்றனவா என்பதை மதிப்பீடு செய்ய சுயேச்சைக் கணக்காய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றப் பிரதானத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த விவரங்கள், அதிபர் டிரம்ப் தமது சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துகொண்ட ஒப்பந்த நகலில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தங்களது செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், திட்டமிடப்படாத வழிகளில் தொழில்நுட்ப அமைப்புகளை ஊடுருவவோ அல்லது அணுகவோ செய்யாது என்பதை உறுதிப்படுத்தவும் பாடுபடப்போவதாக அந்நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
முன்னதாக, ‘ஓப்பன்ஏஐ’ மற்றும் ‘ஆந்திரோப்பிக்’ ஆகிய நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டு, பிற நிறுவனங்களின் தொழில்நுட்ப அமைப்புகளில் ஊடுருவியதாகச் செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து, அதிநவீனச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த அச்சமும் அரசின் மீதான கண்காணிப்பும் அதிகரித்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சியளிக்கவும் அவற்றை இயக்கவும் பயன்படும் தரவு மையங்கள், மின்சாரத் தேவை, பொதுப் பயன்பாட்டுக் கட்டண உயர்வுகள் மற்றும் பிற உள்ளூர்ச் சமூகப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நாடு முழுவதும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றன.
இவ்வாண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் குடியரசுக் கட்சியினருக்கு இந்த எதிர்ப்பு ஒரு பெரிய அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் பாதுகாப்பைக் கண்காணிக்க பத்து பேரைக் கொண்ட குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த அமைப்பின் உத்தேச உறுப்பினர்கள் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மேலும், வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளை வழிநடத்தப் புதிய அதிகாரி ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
