வாஷிங்டன்: பிரிக்ஸ் கூட்டமைப்பின் ‘அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன்’ தங்களை இணைத்துக்கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“பிரிக்சின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக்கொள்ளும் எந்த நாட்டிற்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இல்லை. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!” என்று திரு டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் குறிப்பிட்ட ‘அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகள்’ பற்றி தெளிவுபடுத்தவோ விவரிக்கவோ இல்லை.
டிரம்ப் நிர்வாகத்தின் அதிக வரிகள் மீதான 90 நாள் இடைநிறுத்தம் ஜூலை 9ல் முடிவடைய உள்ள நிலையில், வரும் நாள்களில் பல நாடுகளுக்கு வரிவிதிப்புக் கடிதங்களை அனுப்ப அமெரிக்கா தயாராகிவரும் நேரத்தில் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.
ஜூலை 7 நண்பகல் வாஷிங்டன் நேரம் (சிங்கப்பூர் நேரம் ஜூலை 8 நள்ளிரவு 12 மணி) முதல், கடிதங்கள் விநியோகிக்கப்படும் என்று திரு டிரம்ப் வேறொரு பதிவில் தெரிவித்தார்.
ஜி7, ஜி20 போன்ற முக்கியப் பொருளியல்களின் மாநாடுகள் பிரிவினைகளாலும் திரு டிரம்பின் சீர்குலைக்கும் ‘அமெரிக்காவுக்கு முன்னுரிமை’ அணுகுமுறையாலும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், வன்முறை மோதல்களுக்கும் வர்த்தகப் போர்களுக்கும் மத்தியில் பலதரப்பு அரசதந்திரத்திற்கான புகலிடமாக பிரிக்ஸ் அமைப்பு தன்னை முன்னிறுத்தி வருகிறது.
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, பனிப்போரின் அணிசேரா இயக்கத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தினார். அணிசேரா இயக்கம் என்பது கருத்து மோதல்களுடைய உலக ஒழுங்கின் இரு பக்கங்களிலும் சேர மறுத்த வளரும் நாடுகளின் குழுவாகும்.
ஜூலை 6ஆம் தேதி பிரிக்ஸ் அமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டறிக்கையில், வரி அதிகரிப்பு உலக வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என எச்சரித்தது. இது, திரு டிரம்ப்பின் அமெரிக்க வரிக் கொள்கைகள் குறித்த பிரிக்சின் மறைமுகமான விமர்சனத்தைத் தொடர்கிறது.
தொடர்புடைய செய்திகள்
திரு டிரம்ப்பின் நிர்வாகம், கணிசமான ‘பதிலுக்குப் பதில் வரிகளை’ விதிப்பதற்கான அவரது ஜூலை 9 காலக்கெடுவுக்கு முன், பல்வேறு நாடுகளுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களை இறுதிசெய்ய முற்படுகிறது.
பிரிக்ஸ் நாடுகள் தற்போது உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையையும் அதன் பொருளியல் உற்பத்தியில் 40 விழுக்காட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று திரு லூலா ஜூலை 5ஆம் தேதி வணிகத் தலைவர்களிடம் குறிப்பிட்டார். அதிகரித்துவரும் தன்னைப்பேணித்தனம் பற்றியும் அவர் எச்சரித்தார்.
அசல் பிரிக்ஸ் அமைப்பு 2009ல் தனது முதல் உச்சநிலை மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்தது.
இந்தக் கூட்டமைப்பு பின்னர் தென்னாப்பிரிக்காவைச் சேர்த்தது. 2024ல் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனீசியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளையும் உறுப்பினர்களாக அது சேர்த்தது. இந்தோனீசியாவை உள்ளடக்கிய தலைவர்களின் முதல் உச்சநிலை மாநாடு இதுவாகும்.
பிரிக்ஸ் அமைப்பில் முழு உறுப்பினர்களாகவோ பங்காளிகளாகவோ பங்கேற்க 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.