வாஷிங்டன்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய இலக்குகள்மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்கா கடந்த வாரம் லெபனானுக்கான போர்நிறுத்தத் திட்டத்தை அறிவித்திருந்த நிலையிலும், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. இந்தத் தீவிரப் பதற்றநிலை குறித்து நியூ ஜெர்சியில் இருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், இந்த மோதல் போக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குச் சாதகமாக இருக்காது என்றும் இத்துடன் ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களை நிறுத்திக்கொண்டு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவைத் தொடர்புகொண்டு ஈரானுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என வலியுறுத்தவுள்ளேன் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்.
லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தவில்லை. தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்; பலர் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தி லெபனானிலிருந்து அதன் படைகளை மீட்டுக்கொள்ளும் வரை ஆயுதம் ஏந்திய போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நடத்தியதால் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் தலைநர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிமீது தமது படைகள் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 7) தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறியுள்ளார்.

