வாஷிங்டன்: ஈரானிலுள்ள அணுசக்தி தொழில்நுட்பம் கொண்டுள்ள மூன்று இடங்களில் வெற்றிகரமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜூன் 21ல் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய விமானங்கள் பாதுகாப்புடன் தாயகம் திரும்புவதாகத் திரு டிரம்ப், ட்ரூத் சமூகத் தளத்தில் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ வீரர்களையும அவர் அந்தப் பதிவில் வாழ்த்தினார்.
“இப்போது அமைதிக்கான நேரம்,” என்ற வாசகத்துடன் திரு டிரம்ப், அந்தப் பதிவை முடித்துக்கொண்டார்.
இஸ்ரேலும் ஈரானும் ஒரு வாரத்திற்கு மேலாக ஒன்று மற்றொன்றின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணுவாயுதங்களை உருவாக்கும் வாய்ப்பை அகற்றுவதாகக் கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தத் தொடங்கியது.
ஆனால், தனது அணுவாயுதத் திட்டங்கள் வன்முறைக்கானது அல்ல என்று ஈரான் கூறுகிறது.
மோதல் போக்கைத் தவிர்க்க மேற்கத்திய நாடுகள் இதுவரை எடுத்து வந்த அரசதந்திர முயற்சிகள் இதுவரை தோல்வி அடைந்துள்ளன.
வடக்கு ஈரானின் கோம் நகருக்கு அருகிலுள்ள ஃபோர்டோ அணுவாயுதத் தளத்தின் ஒரு பகுதி வான்வழி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அந்நாட்டின் ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இஸ்ரேலில் பள்ளிகளும் வேலையிடங்களும் இன்றிலிருந்து மூடப்படும் என்றும் அவசரச் சேவைகள் மட்டும் இயக்கத்தில் இருக்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ், ஹைஃபா, நெஸ் ஸியோனா ஆகிய நகரங்களையும் தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய மீட்புச் சேவையினர் தெரிவித்தனர்.
குறைந்தது 23 பேர் கயமடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர். அத்துடன்,வீடுகளும் கட்டடங்களும் பலமாகச் சேதமடைந்துள்ளன.
ஈரானின் அணுசக்தித் தளங்களை தாக்கியது வழியாக ஐக்கிய நாடு அமைப்பின் சாசனம், அனைத்துலகச் சட்டம் உள்ளிட்ட அனைத்துலக விதிமுறைகளை அமெரிக்கா கடுமையாக மீறியிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சீ சாடினார்.
இந்தத் தாக்குதல்கள் நியாயத்திற்குப் புறம்பானவை என்றும் அதன் பின்விளைவுகள் என்றென்றும் நீடிக்கக்கூடியவை என்றும் அவர் கூறினார்.
பாலஸ்தீன கிளர்ச்சிக் குழு ஹாமசும் இந்தத் தாக்குதல் குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டது.
இந்தத் தாக்குதல், மத்திய கிழக்கின் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஆட்டங்காண வைத்திருப்பதாக ஈராக் எச்சரித்தது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கும் பிரிட்டனுக்கும் சம்பந்தமில்லை என்றாலும் தாக்குதலை நடத்தும் அமெரிக்காவின் திட்டங்களை பிரிட்டிஷன் பிரதமர் கியர் ஸ்டாமருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.