வாஷிங்டன்: நண்பன், எதிரி என்ற வித்தியாசமின்றி எல்லாரையும் குறிவைக்கும் வரிவிதிப்புத் திட்டங்களை அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
‘எதிரெதிர் வரிகளை’ உயர்த்துவதற்கான திட்டங்களில் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) அவர் கையெழுத்திட்டார்.
அந்தத் திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட திரு டிரம்ப், “அமெரிக்காவுக்கு எந்த மாதிரியான வரிகளை பிற நாடுகள் விதிக்கின்றனவோ அதே மாதிரி வரிகளை அமெரிக்காவும் அவற்றுக்கு எதிராக விதிக்கும்,” என்றார்.
போட்டி நாடுகளை மட்டுமல்லாது நட்பு நாடுகளையும் பாதிக்கக்கூடிய வகையில் அந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
திரு டிரம்ப்பின் அந்த நடவடிக்கை அனைத்துலக அளவில் வர்த்தகப் போரைத் தூண்டக்கூடிய வகையிலும் உள்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்கும் விதத்திலும் இருப்பதாக பொருளியல் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
அதிபராகப் பதவி ஏற்றது முதல் திரு டிரம்ப் அமெரிக்காவின் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளி நாடுகளைக் குறிவைத்து வரிகளை உயர்த்தி வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை தமது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருதரப்புத் தீர்வைகளை விதிக்க தாம் முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.
வர்த்தகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான வேளைகளில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் ‘எதிரிகளைவிட மோசமானவை’ என்றார்
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் மிகவும் கொடுமையானது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு சற்று முன்னர் இந்தக் கருத்துகளை திரு டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவுடன் சிறப்பான வர்த்தக உடன்பாடுகளை ஏற்படுத்த தாம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திரு மோடி அமெரிக்கா செல்லத் தயாரான வேளையில் அமெரிக்க இறக்குமதிகள் சிலவற்றுக்கு இந்தியா வரிவிலக்குகளை அறிவித்தது. குறிப்பாக, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அது வரிச்சலுகைகளை அறிவித்தது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் திரு டிரம்ப், திரு மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. அது பற்றிக் குறிப்பிட்ட திரு டிரம்ப், வரிக்குறைப்பு பற்றிப் பேச தயாராக இருப்பதாக திரு மோடி சொன்னதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய், எரிவாயு, போர் விமானம் உள்ளிட்டவற்றை வாங்கும் விருப்பத்தையும் அப்போது திரு மோடி தெரிவித்ததாக அவர் கூறினார்.
“இந்தியச் சந்தையில் அமெரிக்காவின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு விதிக்கப்பட்ட நியாயமற்ற, மிகவும் அதிகமான வரிகளைத் தற்போது குறைக்க இருப்பதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். அது ஒரு பெரிய பிரச்சினை என்றுதான் நான் சொல்லுவேன்,” என்றும் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
இருப்பினும், வர்த்தகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலான ஒப்பந்தத்தை ஏற்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தம் அடுத்த ஏழு மாதங்களுக்குள் ஏட்டப்படலாம் என்று, இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
அதனை ஆமோதிக்கும் வகையில் இவ்வாண்டுக்குள் அப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகலாம் என மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவரும் தெரிவித்தார்.