மேரிலேண்ட்: காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தக் கனடா இன்னும் சிறந்த முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (ஜூலை 19) வலியுறுத்தியிருக்கிறார்.
காட்டுத்தீப் பிரச்சினைக்காக கனடியப் பொருள்களுக்குக் கூடுதல் தீர்வை விதிக்கப்போவதாக அச்சுறுத்திய மறுநாள் அவர், கனடியப் பிரதமர் மார்க் கார்னியிடம் பேசினார். உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு இடையில் தலைவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.
“திரு கார்னியுடன் எனக்கு நல்லுறவு இருக்கிறது. ஆயினும் காட்டுத்தீயை நிறுத்தியாக வேண்டும்,” என்றார் திரு டிரம்ப். நியூ ஜெர்சியில் உலகக் கிண்ணப் போட்டியைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கனடியத் தரப்பினர் தங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஈடுகட்ட வேண்டும் அல்லது தாங்கள் அவர்களுக்குத் தீர்வை விதிக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
ஒன்டாரியோவில் ஏற்பட்ட காட்டுத்தீ, அமெரிக்காவின் பல பகுதிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து அந்தப் பகுதிகளில் தூசமூட்டப் பிரச்சினை நிலவுகிறது. இயன்றவரை வீட்டுக்குள் இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரு டிரம்ப்பின் கருத்துகளுக்குத் திரு கார்னியின் அலுவலகம் உடனடியாகப் பதில் கூறவில்லை.
கனடா, 5,300க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாகத் திரு கார்னி அண்மையில் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார். காட்டுத்தீ எங்கு மூண்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துத் தணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
கனடாவில் இந்தப் பருவகாலத்தில் ஏறக்குறைய 2.4 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீயில் கருகிவிட்டதாக அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக உலக அளவில் வெப்பநிலை கூடுவதாகவும் அதனால் காட்டுத்தீச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

