வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்யாவுடன் உடன்பாட்டை எட்டும்படி உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியிடம் கூறியிருக்கிறார். திரு ஸெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் திரு டிரம்ப்பை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) சந்தித்தார்.
ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களை முடுக்கிவிட டோமாஹாக் ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்குத் திட்டமிட்டிருந்தார் உக்ரேனிய அதிபர். ஆனால் அதிபர் டிரம்ப்போ போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவரை நெருக்கியிருக்கிறார்.
திரு டிரம்ப் சென்ற மாதம்தான் உக்ரேன் அது இழந்த பகுதிகள் அனைத்தையும் திரும்பப் பெறக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்க ஒப்புக்கொண்ட மறுநாள், அவர் தமது நிலையை மாற்றிக்கொண்டுள்ளார்.
“அதிபர் டிரம்ப் ‘இல்லை’ என்று சொல்லவில்லை. அது நல்லது. மாறாகக் கீவுக்கு டோமாஹாக்கைத் தருவதற்கு ‘ஆமாம்’ என்று அவர் இப்போது கூறவில்லை,” என்று திரு ஸெலென்ஸ்கி அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான என்பிசியிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திரு ஸெலென்ஸ்கியுடன் நடத்திய பேச்சு நட்பார்ந்த முறையில் அமைந்ததாகத் திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். அதிபர் புட்டினிடம் சொன்னதைப் போன்றே போரை நிறுத்தி உடன்பாட்டை எட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதாக அவரிடமும் கூறியதாக அமெரிக்க அதிபர் சொன்னார்.
“தற்போதுள்ள நிலையிலேயே இருவரும் போரை நிறுத்தவேண்டும். இருவருமே வெற்றி என்று சொல்லிக்கொள்ளட்டும். வரலாறு அதனை முடிவுசெய்யட்டும்,” என்றார் திரு டிரம்ப்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புட்டின் புடாபெஸ்ட்டில் அமெரிக்க அதிபரைப் பாதுகாப்பான முறையில் சந்தித்துப் பின்னர் தாயகம் திரும்புவது உறுதிசெய்யப்படும் என்று ஹங்கேரி கூறியிருக்கிறது. ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர் சியார்ட்டோ வெள்ளிக்கிழமை அந்த உத்தரவாதத்தைத் தந்தார்.
ஹங்கேரியத் தலைநகரில் உக்ரேனியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி விவாதிக்கத் திரு புட்டினை இரண்டு வாரத்திற்குள் சந்திக்கத் திரு டிரம்ப் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கினார். ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஓர்பன், தலைவர்கள் இருவரிடமும் பேசிய பின்னர், சந்திப்புக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகச் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
உக்ரேனில் போர்க் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படுவதன் தொடர்பில் அனைத்துலக் குற்றவியல் நீதிமன்றம் திரு புட்டினுக்குக் கைதாணை பிறப்பித்துள்ளது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறி மாஸ்கோ அதனை நிராகரித்தது. அதன் பிறகு, திரு புட்டின் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.
உக்ரேனில் அமைதி ஏற்பட உதவும் எந்தவொரு பேச்சையும் ஒன்றியம் வரவேற்பதாக அதன் பேச்சாளர் கூறினார். திரு புட்டினுக்கு எதிராகச் சொத்து முடக்கம் நடப்பிலிருப்பதாகக் குறிப்பிட்ட பேச்சாளர், பயணத் தடை எதுவும் இல்லை என்றார்.
திரு புட்டினின் விமானத்தை அனுமதிப்பது குறித்து ஒன்றியமோ ஹங்கேரியோ முடிவெடுக்க வேண்டும் என்றும் அந்தப் பேச்சாளர் சொன்னார்.