துபாய்/வாஷிங்டன்: போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்காவின் அண்மை நிலைப்பாட்டை ஆராய்ந்து வருவதாக ஈரான் வியாழக்கிழமை (மே 21) தெரிவித்துள்ளது.
ஈரானிடமிருந்து ‘சரியான பதில்களை’ பெறுவதற்காகச் சில நாள்கள் காத்திருக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதையடுத்து, இத்தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், உடன்பாட்டிற்கு இணங்காவிட்டால் ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
“அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி ஆராய்ந்து வருகிறோம்,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் கூறியதாக அந்நாட்டின் நூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை ஏற்று நடத்திய பாகிஸ்தான், தற்போது இருதரப்புக்கும் இடையே தூதுவராகச் செயல்படுவதுடன், சமரச முயற்சிகளையும் தொடர்கிறது.
போர் நிறுத்தம் நடப்பிற்கு வந்து ஆறு வாரங்கள் ஆகியும், போரை முடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
மாறாக, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது உலகப் பொருளியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறைந்துவரும் செல்வாக்கு
அமெரிக்காவில் இவ்வாண்டு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், எரிபொருள் விலையேற்றத்தால் அதிபர் டிரம்ப்பிற்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு கிட்டத்தட்ட இதுவரை இல்லாத அளவிற்குக் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, “ஈரான் மீதான தாக்குதல் தொடர்ந்தால், இம்முறை வட்டாரப் போர் எல்லை தாண்டி விரிவடையும்,” என்று ஈரானின் புரட்சிக் காவல்படை எச்சரித்துள்ளது.
ஈரான் இவ்வாரம் சமர்ப்பித்த புதிய அமைதித் திட்டத்தில், ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு, போர்ச்சேத இழப்பீடு, தடைகளைத் திரும்பப் பெறுதல், முடக்கிய சொத்துகளை விடுவித்தல், அமெரிக்கப் படைகளை வெளியேற்றுதல் போன்ற நிபந்தனைகளை மீண்டும் முன்வைத்துள்ளது.
உலகின் கச்சா எண்ணெய், எரிவாயு வணிகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெற்றுவந்தது. ஆனால், அமெரிக்கா - ஈரான் இடையே போர் தொடங்கியபின் அந்த நீரிணை மூடப்பட்டுவிட்டது. இதனால், உலகின் எரிசக்தி விநியோகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நான்கு மில்லியன் பீப்பாய் எண்ணெய்யைச் சுமந்து சென்ற இரண்டு சீனப் பெருங்கப்பல்களும் குவைத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிய தென்கொரியக் கப்பல் ஒன்றும் ஈரானின் ஒத்துழைப்புடன் புதன்கிழமை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துசென்றன.

