வாஷிங்டன்: சீனாவுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பு விரும்புவதாகச் சீனாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்தபோது அவரிடம், அமெரிக்க ஆயுதங்களை வாங்க விருப்பமா என்று அதிபர் டிரம்ப் கேட்டதாக அமெரிக்கத் தூதரான டேவிட் பெர்டியு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) ஃபாக்ஸ் நியூஸ் சண்டே தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு நாங்கள் ஆயுதங்களை விற்று வருகிறோம் என்று டிரம்ப் தொடர்ந்து அவரிடம் கூறியதாகவும் தெரிகிறது.
கடந்த வாரம் சீன அதிபர் ஸி ஜின்பிங் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வப் பயணம் பற்றி தூதர் பெர்டியு பேசினார்.
ஒரு கட்டத்தில், நீங்கள் ஆயுதங்கள் சிலவற்றை வாங்க விரும்புகிறீர்களா என்றும் சீன அதிபரிடம் டிரம்ப் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் இது பற்றி மேல் விவரங்களை தூதர் பெர்டியு தெரிவிக்கவில்லை. சீன அதிபர் அதற்கு என்ன பதிலளித்தார் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.
சீனாவுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் விரும்புவதாகக் கூறப்படுவது வழக்கத்திற்கு மாறான செய்தியாகும்.
அமெரிக்காவை ஒரு வல்லரசாக சவாலுக்கு உட்படுத்தக்கூடிய ஒரே உண்மையான போட்டியாளராக சீனா இருந்து வருகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ, பொருளியல் போட்டி நாடாக சீனாவை அமெரிக்காவின் இரு கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருதுகின்றனர்.
இது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது, சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் மூலம் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கச் சட்டம் சீனாவுக்கு ஆயுதங்கள் விற்பதைத் தடை செய்கிறது. மேலும், சீனாவுக்கு ஆயுதங்களை விற்கும் எந்தவொரு விருப்பமோ திட்டமோ இல்லை,” என்று தெரிவிக்கப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் இது குறித்து உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
