டெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலவிவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆனால், இவ்வளவு சீக்கிரமாக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று ஈரான் அதனை மறுத்துள்ளது.
அதுகுறித்துப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்துரைத்தார்.
“இருதரப்பும் அமைதி ஒப்பந்தத்திற்கான வரைமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளன. ஜூன் 14 அன்று மின்னணுக் கையொப்பமிடுவதற்கான ஏற்பாடுகளைப் பாகிஸ்தான் செய்துவருகிறது. இதையடுத்து, அடுத்த வாரம் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சு நடைபெறும்,” என்றார் அவர்.
முன்னதாக, அதிபர் டிரம்ப், தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் ஈரானிய விவகாரம் குறித்துப் பதிவிட்டிருந்தார்.
“ஈரானுடனான ஒப்பந்தம் ஜூன் 14ஆம் தேதியன்று கையெழுத்தாக உள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஈரானால் முடக்கப்பட்ட உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணை உடனடியாக அனைவருக்கும் திறந்துவிடப்படும்,” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, ஒப்பந்தம் கையெழுத்தாகும் தேதி குறித்து இப்போதே கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி எச்சரித்துள்ளார்.
“புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் சரியான தேதி எது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், அது நிச்சயமாக ஜூன் 14 அன்று கிடையாது. வரும் நாள்களில் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது,” என்று அந்நாட்டு அரசாங்க ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிகாரி ஒருவர், ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரத்தைக் குறிப்பிட மறுத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், “இது மிகவும் வலுவான, ஒரு சிறந்த ஒப்பந்தம்” என்றார் அவர்.
இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான்மீது நடத்திய வான்வழித் தாக்குதலுடன் தொடங்கிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர, இருதரப்பும் நெருங்கிவருவது இது முதல் முறையல்ல.
“முன்பைவிட இப்போது நாம் அமைதி ஒப்பந்தத்திற்கு மிக அருகில் இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் பிரதமர், ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

