வாஷிங்டன்: திருமணத்துக்குப் பிந்திய கொண்டாட்டங்களுக்கான செலவுகளை ரஷ்ய அதிபர் மாளிகையுடன் நெருங்கிய தொடர்புடைய ரஷ்யத் தொழிலதிபர் ஏற்றுக்கொண்டதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த மகனும் அவரின் புதிய மனைவியும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
டோனல்ட் டிரம்ப் ஜூனியரும் பெட்டினா டிரம்ப்பும் இணைந்து இன்ஸ்டகிராமில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்ட பதிவில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
தங்களின் அன்பு நண்பர் உமர் கிரெம்லேவ் இவ்வாண்டு மே மாதம் பஹாமாசில் இரண்டு நாள்கள் நடைபெற்ற அதிகச் செலவுமிக்க அற்புதமான கொண்டாட்டங்களை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டங்களுக்காகத் திரு கிரெம்லேவ் பல்லாயிரம் டாலர் செலவிட்டார் என்று ‘ப்ரோபப்ளிகா’ என்ற புலனாய்வு இணையத்தளம் தகவல் வெளியிட்டதை அடுத்து, அவர்களின் கருத்து வந்துள்ளது.
“இது நண்பர் ஒருவரிடமிருந்து கிடைத்த அசாதாரணமான, தாராளமான திருமணப் பரிசு. இதற்காக நாங்கள் என்றும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,” என்று பெட்டினா- டோனல்ட் ஜூனியர் பதிவில் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் இந்தத் திருமணத்திலோ கொண்டாட்டங்களிலோ கலந்துகொள்ளவில்லை. ஈரான் போர் குறித்த பேச்சுகள் காரணமாக வாஷிங்டனில் தாம் இருக்கவேண்டியிருந்ததாக அவர் கூறினார்.
திரு கிரெம்லேவ் அனைத்துலகக் குத்துச்சண்டைச் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
நிதி நிர்வாகம், நெறிமுறைகள் குறித்த தொடர் எச்சரிக்கைகளுக்குப் பிறகு, அனைத்துலக ஒலிம்பிக் குழு அந்த அமைப்புடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டது.
