வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தற்காலிகமாக நிம்மதியடைந்துள்ளார். மே 29ஆம் தேதி வர்த்தக நீதிமன்றம் அவரது வரிவிதிப்புக்கு விதித்த தடையை மேல்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதையடுத்து சீனா மற்றும் பங்காளி நாடுகள்மீதான அவரது இறக்குமதி வரி தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
இதற்கு முந்தைய நாள் மே 28ஆம் தேதி அன்று வர்த்தக நீதிமன்றம், டிரம்ப்பின் அனைத்து வரிகளுக்கும் தடை விதிப்பதாக அறிவித்தது.
அப்போது தனது அதிகாரத்தை டிரம்ப் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
கடந்த ஜனவரியில் அதிபர் பதவிக்குத் திரும்பிய டிரம்ப், உலகம் முழுவதும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை மாற்றியமைத்தார். அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எதிர்பாராத அளவு வரிகளை விதித்து வெளிநாட்டு அரசாங்கங்களை அவர் பணிய வைக்க முயற்சி செய்தார்.
ஆனால் டிரம்ப்பின் நடவடிக்கை நட்பு நாடுகளுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த உலகச் சந்தை சீர்குலைந்தது. விநியோகத் தொடர் மெதுவடைந்தது.
மே 29ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்னதாக வெள்ளை மாளிகைக்கு வரிகளை பத்து நாள்களுக்குள் நிறுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பு, அப்பட்டமான தவறு என்று டிரம்ப் நிர்வாகம் கூறியது. இந்தத் தீர்ப்பு நிச்சயம் மாறும் என்றும் அது நம்பிக்கை தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை பேச்சாளரான கரோலின் லீவிட், நீதிபதிகள் ‘அதிபர் டிரம்ப்பின் அதிகாரத்தை’ பறிக்க தங்கள் நீதித்துறை அதிகாரத்தை வெட்கமின்றி துஷ்பிரயோகம் செய்தனர்,” என்றார்.
வரி விதிப்புக்கு ஏற்பட்டுள்ள சவால்களுக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறிய அவர், திரு டிரம்ப் வரிகளை விதிப்பதற்கு வேறு சில சட்ட வழிகளும் இருப்பதை சுட்டிக்காட்டினார்.