லக்ஸம்பர்க்: சிங்கப்பூர் நிச்சயமற்ற மாறிவரும் உலகச் சூழலில் தொடர்ந்து முன்னேற நிலைத்தன்மையுடனும் இருப்பதோடு சில அம்சங்களில் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றுக்கு மேற்கொண்ட ஆறு நாள் அதிகாரத்துவப் பயணத்தின் முடிவில் அதிபர் தர்மன் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாட்டுத் தலைவர்களையும் வர்த்தகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசிய அவர், “சிறிய நாடாக இருந்துகொண்டு இன்றைய உலகில் பொறுப்பான முறையில் எப்படி பங்காற்றலாம் என்பது பற்றிய நம் சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது,” என்றார்.
“உலகம் மாறிவருகிறது. நிச்சயமற்ற நிலை பெருகியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் உலகம் இன்னும் எப்படியெல்லாம் மாறும் என்று கணிக்க முடியாது. இருப்பினும் நாம் முன்னேறவேண்டும். தொடர்ந்து உலக நன்மைக்குப் பங்களிக்கவேண்டும்,” என்றார் அதிபர் தர்மன்.
சிங்கப்பூர்த் தலைவர் ஒருவர் பெல்ஜியத்துக்கும் லக்ஸம்பர்க்குக்கும் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. மாறிவரும் உலக அதிகாரம் பற்றி தலைவர்கள் முக்கியமாகக் கலந்துரையாடினர்.
அதிபர் தர்மன் உயிர்மருத்துவத் தொழில்நுட்பம், நிதி என பெல்ஜியத்தின் முக்கிய துறைகளில் உள்ள வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்துப்பேசினார்.
“ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் உற்பத்தி செய்வது, கப்பல்களை உருவாக்குவது போன்றவை மலிவு அல்ல. ஆனால் நிறுவனங்கள் நீண்டகாலத்துக்கு இங்கு முதலீடு செய்கின்றன. அவர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவருவது சிங்கப்பூர் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை,” என்று அதிபர் தர்மன் விவரித்தார்.
ஆழமான நிபுணத்துவம் மூலம் உலகிற்கு நமது மதிப்பை நிரூபிக்கவேண்டும் என்ற அவர், அனைத்திலும் நாம் சிறந்து விளங்க முடியாது என்றபோது சிங்கப்பூர், பெல்ஜியம், லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் நிபுணத்துவ திறன்களை வலுப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆழமான நிபுணத்துவம் கொண்ட சிறிய நாடுகள் அறிவு பரிமாற்றத்தின் மூலம் பயனடையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூர்மீது அதிக மதிப்பும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் இருப்பதால் நல்ல நிலையில் இருக்கிறோம் என்ற அதிபர் தர்மன், நமது திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டு நம்மைப் பயனுள்ளவர்களாக முன்னிலைப்படுத்தும் பங்காளித்துவதைக் கண்டறியவேண்டும் என்றார்.